இந்திய கிரிக்கெட் அணியுடன் மனநல ஆலோசகர் எப்போதும் இருக்க வேண்டும் – டோனி வேண்டுகோள்

இந்திய கிரிக்கெட் அணியுடன் மனநல ஆலோசகர் எப்போதும் இருக்க வேண்டும் – டோனி வேண்டுகோள்

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான தமிழகத்தை சேர்ந்த எஸ்.பத்ரிநாத் தனது நண்பருடன் இணைந்து, விளையாட்டு வீரர்கள் எதிர்கொள்ளும் மனஅழுத்தத்தை சமாளித்து சாதிக்க உதவுவதற்காக ‘எம்போர்’ என்ற அமைப்பை ஏற்படுத்தி உள்ளார். இந்த அமைப்பு சார்பில் பல்வேறு விளையாட்டுகளை சேர்ந்த பயிற்சியாளர்களுடன் நடந்த கலந்துரையாடல் நிகழ்ச்சியில், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், கடந்த ஆண்டு நடந்த உலக கோப்பை போட்டிக்கு பிறகு கிரிக்கெட்டில் இருந்து ஒதுங்கி இருப்பவருமான 38 வயது டோனி காணொலி காட்சி மூலம் பேசுகையில் கூறியதாவது:-

‘இந்தியாவை பொறுத்தமட்டில் மனநலம் சார்ந்த சில பலவீனங்கள் ஏற்பட்டால் அதனை ஏற்றுக்கொள்வது இன்னும் பெரிய பிரச்சினையாக இருந்து வருவதாகவே நான் நினைக்கிறேன். ஆனால் பொதுவாக நாம் அதனை மனநோய் என்று குறிப்பிடுகிறோம். பேட்டிங்கின் போது முதல் 5-10 பந்துகளை எதிர்கொள்ளும் போது எனது இதயத்துடிப்பு எகிறும். அப்போது எனக்கு நெருக்கடியும், லேசான பயமும் ஏற்படும். எனக்கு மட்டுமல்ல எல்லோருக்கும் இதுபோல் இருக்க தான் செய்யும். ஆனால் இந்த உண்மையை யாரும் சொல்வதில்லை. அதனை எப்படி சமாளிப்பது என்று எல்லோரும் யோசிப்பது உண்டு.

இது ஒரு சிறிய பிரச்சினை தான். ஆனால் பல சமயங்களில் இதனை பயிற்சியாளரிடம் சொல்ல நாம் தயக்கம் காட்டுவோம். இதனால் தான் எந்தவொரு விளையாட்டிலும் வீரருக்கும், பயிற்சியாளருக்கும் இடையிலான உறவு என்பது மிகவும் முக்கியமானதாகும். மனநல ஆலோசகர் என்பவர் 10, 15 நாட்கள் மட்டும் அணியுடன் இருப்பவராக இருக்கக்கூடாது. அப்படி இருந்தால் அவரால் அனுபவத்தை மட்டுமே பகிர்ந்து கொள்ள முடியும். மனநல ஆலோசகர் எப்போதும் அணியுடன் நிலையாக இருக்க வேண்டியது அவசியமானதாகும். அப்போது எந்தெந்த விஷயங்களினால் ஒரு வீரரின் ஆட்டத்திறன் பாதிக்கப்படுகிறது என்பது அறிந்து அதற்கு தகுந்தபடி ஆலோசனைகளை வழங்க முடியும்.


Related posts

Leave a Comment