தி.மு.க.வுக்கு பிரசாந்த் கிஷோர் சொன்ன யோசனை

சென்னை: தமிழகத்தில், ஒரு பக்கம் கொரோனா வாட்டி வதைத்தாலும், இன்னொரு பக்கம், அடுத்த வருட துவக்கத்தில் வரும், சட்டசபை தேர்தலுக்கான ஆயத்த வேலைகளை, அரசியல் கட்சிகள் தொடங்கி விட்டன. எதிர்கட்சியான தி.மு.க.,வின் தேர்தல் வியூகத்தை வகுக்க, தேர்தல் வல்லுனர், பிரசாந்த் கிஷோர் பாண்டே, 300 கோடி ரூபாய் வாங்கியதாக கூறப்படும் நிலையில், அவரும் வேலைகளைத் துவங்கி விட்டார்.

கடந்த, 2014ல் மோடிக்கு, லோக்சபா தேர்தல் பிரசாரத்தில் உதவிய இவரை, பா.ஜ., ‘கழற்றி’ விட்டது. பின் பீஹார் முதல்வர் நிதிஷ் குமாரிடம் சென்றார். அவரும் பிரசாந்தை ஓரங்கட்டிய பின், மேற்கு வங்க முதல்வர், மம்தா பானர்ஜிக்கு ஆலோசகராக முயற்சித்தார். ஆனால், மம்தா மறுத்து விட்டார். இதையடுத்து, காங்கிரசிற்கு வியூகம் வகுக்க, அக்கட்சி தலைவர்களை நெருங்கினார். ஆனால் அங்கும் தோல்வி தான் மிச்சம். கடைசியாக, தி.மு.க.,தான் இவருக்கு அடைக்கலம் கொடுத்ததோடு, பணத்தையும் கொட்டிக் கொடுத்துள்ளது.

தமிழகத்தில் நிலவும், பிரதமர் மோடி எதிர்ப்பு அலை தான், தி.மு.க.,வை மீண்டும் ஆட்சியில் அமர்த்தும் என்பது பிரசாந்தின் வியூகம். இதற்காக, சில நிமிடங்கள் ஓடக் கூடிய, ‘வீடியோ க்ளிப்’ களை தயாரிக்க ஆரம்பித்துவிட்டார். மக்களிடம் கருத்து கேட்கும் இந்த வீடியோக்களில், அவர்கள் அனைவரும், ‘தி.மு.க.,தான் ஆட்சிக்கு வர வேண்டும்; அ.தி.மு.க., ஆட்சி சரியில்லை’ என, கூறுவது போல் இருக்குமாம்.

தமிழக, ‘டிவி’ சேனல்களில், மோடிக்கு எதிராக பேசக் கூடியவர்களை எல்லாம் அழைத்து, பிரசாந்த் பேசியுள்ளார். ‘காங்கிரசை, ‘கழற்றி’ விடுங்கள்; உங்களை, 150 தொகுதிகளில் வெற்றி பெற வைக்கிறேன்; யாருடைய தயவும் இல்லாமல் நீங்கள் ஆட்சி அமைக்கலாம்’ எனவும், தி.மு.க., தலைமையிடம் சொல்லியிருக்கிறார். இது, டில்லி காங்கிரஸ் தலைமைக்கு அதிர்ச்சியை அளித்துள்ளது.இதற்கிடையே, தி.மு.க.,விற்குள்ளேயே, பிரசாந்த் கிஷோருக்கு எதிர்ப்பு உள்ளது. ‘நம்முடைய சொந்த முயற்சியிலேயே வெற்றி பெறலாம்; எதற்கு இவ்வளவு பணத்தை செலவழிக்க வேண்டும்’ என, ஒரு முன்னாள் தி.மு.க., அமைச்சர் தனக்கு நெருக்கமானவர்களிடம் சொல்லி வருத்தப்படுகிறாராம்.

Related posts

Leave a Comment