சுகாதார பணியாளர்களுக்கு கட்டுப்பாடு கூடாது: மத்திய அரசு அறிவுரை

புதுடில்லி: ஊரடங்கு காலத்தில், மருத்துவர்கள், மருத்துவ பணியாளர்கள், தூய்மை பணியாளர்கள் உள்ளிட்ட சுகாதார பணியாளர்கள் மற்றும் ஆம்புலன்ஸ்கள் ஆகியவை தடையின்றி சென்று வருவதை உறுதி செய்ய வேண்டும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக அனைத்து மாநிலங்களுக்கும் உள்துறை செயலர் அஜய் பல்லா எழுதிய கடிதத்தில் கூறியுள்ளதாவது: தனியார் மருத்துவமனைகள், கிளினிக்குகள் திறந்திருப்பதை உறுதி செய்ய வேண்டும். மருத்துவர்கள், மருத்துவ பணியாளர்கள் தடையின்றிசென்று வருவதை உறுதி செய்ய வேண்டும். அவர்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டால், அது கொரோனா மற்றும் கொரோனா அல்லாத நோய்களுக்கு சிகிச்சை அளிப்பதில் சிக்கலை ஏற்படுத்தும்.
வெளிமாநில தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்கு செல்வதற்கு இயக்கப்படும் சிறப்பு ரயில்களுக்கு மாநில அரசுகள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். இந்த ரயில்களை பயன்படுத்த மாநில அரசுகள் நடவடிக்கை எடுத்து வெளிமாநில தொழிலாளர்களை விரைவாக அவர்களது சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

சிறப்பு ரயில்கள் அல்லது மாநில அரசுகளின் பஸ்கள் மூலம் வெளிமாநிலதொழிலாளர்கள் சொந்த ஊருக்கு செல்வதை மாநில அரசுகள் உறுதி செய்வதுடன், அவர்கள் சாலை மார்க்கம் அல்லது ரயில்வே தண்டவாளங்கள் வழியாக நடந்து செல்வதை தடுக்க வேண்டும். அப்படி யாரேனும் சென்றால், அவர்களை மீட்டு நிவாரண முகாம்களில் தங்க வைத்து உணவு தண்ணீர் உள்ளிட்டவை கொடுத்து, சிறப்பு ரயில்களில் சொந்த ஊருக்கு செல்ல ஏற்பாடு செய்ய வேண்டும். இவ்வாறு அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

Related posts

Leave a Comment