முக கவசம் கட்டாயம்: ராதாகிருஷ்ணன் தகவல்

சென்னை: ”கோயம்பேடு காய்கறி சந்தையாலும், வட சென்னையிலும், கொரோனா தொற்று அதிகரித்துள்ளதால், சென்னையில் வரும் நாட்களில், தொற்று உறுதி செய்யப்படுவோர் எண்ணிக்கை அதிகமாக இருக்கும்.”உள்ளாடை அணிவதை போல, முகக் கவசம் அணிவதையும் கட்டாயமாக்க வேண்டும்,” என, பொதுமக்களுக்கு, கொரோனா நோய் தடுப்பு சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சென்னை, ராயபுரம் மண்டல அலுவலகத்தில், கொரோனா தடுப்பு அதிகாரி, ராதாகிருஷ்ணன் அளித்த பேட்டி: கொரோனா பரிசோதனையை அதிகரித்துள்ளதால், சென்னையில், நாளுக்கு நாள் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அடுத்த ஐந்து நாட்களுக்கு, இந்த நிலை தொடரும்; அதற்காக, மக்கள் பயப்பட வேண்டாம்.

கொரோனா என்ற கண்ணுக்கு தெரியாத கிருமியுடன் நடக்கும் போரில், மக்கள் தங்களை, சிப்பாயாக மாற்றிக் கொள்ள வேண்டும். தொண்டை, மூக்கு வழியாக, கொரோனா வைரஸ் பரவுவதால், முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டும். மேலும், இரவு நேரங்களில், 30 சதவீத பொதுமக்கள், முகக் கவசம் அணியாமல் அலட்சியமாக செல்கின்றனர். உள்ளாடை அணிவது போல, மக்கள் முகக் கவசம் அணிவதை கட்டாயமாக்க வேண்டும். முகக் கவசம் அணிவதால், கொரோனா நோயாளிகள் அருகில் இருந்தாலும், நோய் தொற்றுவது தவிர்க்கப்படும்.

இந்தியாவிலேயே, தமிழகத்தில் தான் பரிசோதனை அதிகம் மேற்கொள்ளப்படுகிறது. சென்னையில் உள்ள, 200 வார்டுகளில், 119 வார்டுகளில், 10க்கும் குறைவானோர்; அடுத்த, 60 வார்டுகளில், 11 முதல், 30 பேர் வரை பாதிக்கப்பட்டுள்ளனர். இரண்டு வார்டுகளில் மட்டுமே, 200க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். மக்களின் கோரிக்கையை ஏற்று, இனி, கொரோனா பாதிப்பு கண்டறியப்படும், வீடு மட்டும் முடக்கப்படும். அடுக்குமாடி குடியிருப்புகளில், சம்பந்தப்பட்ட, ‘பிளாக்’ மட்டும் முடக்கப்படும்.

Related posts

Leave a Comment