லாக்டவுன் மீண்டும் நீட்டிப்பா? மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி இன்று 5-வது முறையாக ஆலோசனை

டெல்லி: கொரோனா பரவுவதைத் தடுக்க அமல்படுத்தப்பட்டிருக்கும் லாக்டவுனை மேலும் நீட்டிப்பது தொடர்பாக மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி இன்று ஆலோசனை நடத்த உள்ளார். கொரோனா வேகமாக பரவுவதை தடுக்க மார்ச் 25-ந் தேதி முதல் லாக்டவுன் அமல்படுத்தப்பட்டடது. இந்த ஊரடங்கு நீட்டிக்கப்பட்ட நிலையில் வரும் 17-ந் தேதியுடன் நிறைவடைகிறது.

ஆனால் ஏப்ரல் 20-ந் தேதி முதலே லாக்டவுன் கட்டுப்பாடுகள் பெரும்பாலானவை படிப்படியாக தளர்த்தப்பட்டுவிட்டன. இன்னொரு பக்கம் கொரோனாவின் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து கொண்டே வருகிறது. மத்திய அரசும் கொரோனா வைரஸுடன் வாழ்வதற்கு பழகிக் கொள்ள வேண்டும் எனவும் அறிவுறுத்தி இருக்கிறது. இந்த நிலையில் மே 17-ந் தேதிக்குப் பின்னரும் லாக்டவுன் நீட்டிக்கப்படுமா? அல்லது சில கட்டுப்பாடுகள் மட்டும் நீடிக்குமா? என்பது தெரியவில்லை. இந்நிலையில் இது தொடர்பாக அனைத்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி இன்று மாலை வீடியோ கான்ஃபரன்ஸ் மூலம் ஆலோசனை நடத்துகிறார். கொரோனாவுக்குப் பின் மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி நடத்தும் 5- வது ஆலோசனை கூட்டம் இது.

தெலுங்கானா மாநிலத்தில் ஏற்கனவே லாக்டவுன் இந்த மாதம் இறுதி வரை நீட்டிக்கப்பட்டிருக்கிறது. மேற்கு வங்க மாநில அரசும் மே 21-ந் தேதி வரை லாக்டவுனை நீட்டித்திருக்கிறது. இதனால் இன்றைய கூட்டத்தில் மாநில முதல்வர்கள் தெரிவிக்கும் கருத்துகள் முக்கியத்துவம் வாய்ந்தவையாக பார்க்கப்படும். மேலும் லாக்டவுனுக்குப் பின்னர் பொருளாதார மேம்பாட்டு நடவடிக்கைகளை எவ்வாறு முன்னெடுப்பது என்பது தொடர்பாகவும் மாநில முதல்வர்களின் கருத்தை பிரதமர் மோடி கேட்டறிய உள்ளார். தமிழகத்தில் ஏற்கனவே ரிசர்வ் வங்கி முன்னாள் ஆளுநர் ரங்கராஜன் தலைமையிலான குழு இதற்காக அமைக்கப்பட்டிருக்கிறது. இதேபோல பிற மாநில முதல்வர்களும் பொருளாதார மீட்புக்கான நடவடிக்கைகள் குறித்து பிரதமர் மோடியிடம் இன்று விவரிக்க உள்ளனர்.

Related posts

Leave a Comment