இந்தியாவின்-நிதியமைச்சர்

டெல்லி : லாக்டவுனால் பாதிக்கப்பட்டுள்ள சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் ஊதியம் கொடுக்க கூட முடியாத நிலையில் தவித்து வருகின்றன. இந்நிலையில் அந்நிறுவனங்களுக்கு வங்கிகள் மூலமாக கூடுதல் கடன் வழங்கும் திட்டத்தை அறிவிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கிடையே பொதுத்துறை வங்கி அதிகாரிகளுடன் இன்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆலோசனை நடத்த உள்ளார். கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க, நாடு முழுதும் மார்ச் 24ம் தேதி நள்ளிரவு முதல் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இந்த ஊரடங்கால் நாடு முழுவதும் உள்ள பல்வேறு சிறு, குறு, நடுத்தர நிறுவனங்கள் மூடப்பட்டது. இதனால் அந்த நிறுவனத்தில் பணியாற்றி பல்வேறு தொழிலாளர்கள் வேலை இழந்து தவிக்கிறார்கள். சிறுகுறு நிறுவனத்தினரும் 45 நாட்களுக்கு மேல் மூடிக்கிடந்த காரணத்தால் தொழிலை மீண்டும் தொடங்க பண வசதி இல்லாமல் தவிக்கிறார்கள். ஊழியர்களுக்கு சம்பளம் கூட கொடுக்க இயலாத நிலையில் பல நிறுவனத்தினர் உள்ளனர்.

3.2 கோடி பேர் பலன் நாட்டில் பல கோடி மக்களுக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் வேலை வாய்ப்பை தரும் சிறு குறு தொழில் நிறுவனங்களை ஊக்குவிக்கப்பதற்காக அரசு , பொதுத் துறை வங்கிகள் மூலமாக, அவசர கால கடனாக, 42 ஆயிரம் கோடி ரூபாயை வழங்கி உள்ளதாக கூறப்படுகிறது.. மேலும், இந்த நிறுவனங்கள், வங்கிகளுக்கு செலுத்த வேண்டிய கடன் தவணைகளும், மூன்று மாதங்களுக்கு ஒத்தி வைக்க உத்தரவிட்டுள்ளது. இதன் மூலம் 3.2 கோடி பேர் பலன் அடைந்துள்ளதாக கூறப்படுகிறது.

கடன் வழங்க வாய்ப்பு இந்நிலையில் சிறு குறு மற்றும நடுத்த தொழில் துறைக்கு மேலும் சில சலுகைகளை அறிவிக்க, மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. தற்போதைய நிலையில் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் அதன் செயல்பாட்டு மூலதனத்தில், 10 சதவீதத்தை வரம்பாக நிர்ணயித்து, வங்கிகள் கடன் வழங்கி வருகின்றன. இதன் வாயிலாக, அதிக பட்சமாக, 200 கோடி ரூபாய் வரை கடன் பெற இயலும். அந்த வகையில் வங்கிகள், 27 ஆயிரத்து, 426 கோடி ரூபாய் தொழில் துறையினருக்கு கடன் வழங்கி உள்ளதாக தெரிகிறது.

மத்திய அரசு திட்டம் இந்நிலையில், நிறுவனங்க்ளின் செயல்பாட்டு மூலதன கடன் வழங்கும் வரம்பை, மேலும், 10 – 15 சதவீதம் அதிகரிக்கும்படி, வங்கி களுக்கு, மத்திய அரசு அறிவுறுத்த உள்ளதாக கூறப்படுகிறது. இதன் மூலம் வங்கிகள் விரைவில் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு, தாராளமாக கடன் வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மத்திய அரசிடம் இருந்த விரைவில் வெளியாக உள்ளது.

நிர்மலா சீதாராமன் ஆலோசனை இந்த சூழலில் லாக்டவுன் காலத்தில், வங்கிகள் எடுத்த பல்வேறு நடவடிக்கைகள் குறித்து, பொதுத் துறை வங்கிகளின் நிர்வாகிகளுடன், மத்திய நிதியமைச்சர நிர்மலா சீதாராமன், இன்று ஆலோசனை நடத்த உள்ளார். வீடியோ கான்பரன்ஸ்’ வாயிலாக, நடைபெறும் கூட்டத்தில் ரிசர்வ் வங்கி அளித்த வங்கிகளுக்கான வட்டி விகிதம் குறைப்பு குறித்தும். இந்த கூடுதல் நிதியை, மக்களுக்கும், நிறுவனங்களுக்கு கடனாக வழங்குவது குறித்தும் விவாதிக்கப்பட வாய்ப்பு உள்ளது. மேலும் சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட, வழங்க வேண்டிய கடன் மற்றும் அதற்கான நடைமுறை குறித்தும் இதில் ஆலோசிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. எனவே இன்றைய ஆலோசனை கூட்டத்தில் சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட வாய்ப்பு உள்ளது.

Related posts

Leave a Comment