மிதாலி ராஜ் விருப்பம்

டெல்லி : 2021 மகளிர் உலக கோப்பையை வெற்றி கொள்ள வேண்டும் என்று இந்திய மகளிர் ஒருநாள் அணியின் கேப்டன் மிதாலி ராஜ் தெரிவித்துள்ளார். கடந்த 2017 மற்றும் 2020 உலக கோப்பைகளை இறுதிப்போட்டி வரை வந்து இந்திய அணி தவறவிட்டுள்ளது. இந்நிலையில், இறுதிப்போட்டியில் ஏற்பட்ட அளவுக்கதிகமான நெருக்கடியே தோல்விக்கு காரணம் என்று மிதாலி ராஜ் தெரிவித்துள்ளார். பிசிசிஐக்கு கீழ் மகளிர் கிரிக்கெட் வந்துள்ளதால், வீராங்கனைகள் பல்வேறு பலன்களை பெற்று வருவதாக மிதாலி ராஜ் மகிழ்ச்சி தெரிவித்தார்.

பெருமைக்குரிய மிதாலி ராஜ் இந்திய மகளிர் ஒருநாள் போட்டிகளின் கேப்டனாக உள்ள மிதாலி ராஜ், சர்வதேச ஒருநாள் போட்டிகளில் இதுவரை 209 போட்டிகளில் விளையாடி, 6888 ரன்களை குவித்துள்ளார். மகளிர் ஒருநாள் போட்டிகளில் மிக அதிக ரன்களை குவித்தவர் என்ற பெருமையும் இவருக்குண்டு. இவரது தலைமையில் இந்திய மகளிர் அணி பல சாதனைகளை புரிந்துள்ளது. கடந்த 2017ல் நடைபெற்ற ஒருநாள் உலக கோப்பையில் இறுதிப்போட்டி வரை முன்னேறி கடைசி நேரத்தில் கோப்பையை பறிகொடுத்தது.

மிதாலி திட்டவட்டம் இந்நிலையில் அடுத்த ஆண்டு ஒத்திவைக்கப்பட்டுள்ள மகளிர் ஒருநாள் உலக கோப்பை தொடரை வெல்ல இறுதி முயற்சியை மேற்கொள்ள வேண்டும் என்றும், அதன்பின்பு ஓய்வை அறிவிப்பது சிறப்பானது என்றும் மிதாலி ராஜ் கூறியுள்ளார். முன்னாள் பேட்ஸ்மேன் மற்றும் வர்ணனையாளர் சஞ்சய் மஞ்ச்ரேகருடன் அவர் மேற்கொண்ட கலந்துரையாடலில் இதனை தெரிவித்துள்ளார்.

காரணம் கூறும் மிதாலிராஜ் மிதாலி ராஜ் தான் விளையாடும் போட்டிகளில் மிகவும் மெதுவாக விளையாடுவதாக அவர்மீது ஒரு குற்றச்சாட்டு வைக்கப்படுகிறது. இதுகுறித்த கேள்விக்கு பதிலளித்த மிதாலி, தான் 2000வது ஆண்டில் விளையாட துவங்கியபோது, 40 பந்துகளில் 50 ரன்களை அடித்த வரலாறு உண்டு என்றும், ஆனால் தான் மெதுவாகவும் நிலையாகவும் இருந்து ரன்களை குவிக்க வேண்டும் என்று அணி சார்பில் கோரப்படும் நிலையில், அதை தான் நடைமுறைப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளதாகவும் அவர் மேலும் கூறினார்.

பல பலன்கள் கிடைக்கின்றன பிசிசிஐயின் கீழ் இந்திய மகளிர் அணி வந்துள்ளது மிகவும் பெரிய மற்றும் சிறப்பான விஷயம் என்றும் மிதாலி ராஜ் கூறியுள்ளார். முன்னதாக வயல்வெளி போன்ற பகுதிகளில் தாங்கள் கிரிக்கெட்டை விளையாடி வந்ததாகவும், தற்போது உள்ளூர் போட்டிகளைகூட சர்வதேச தரத்துடனான மைதானங்களில் விளையாடுவதாகவும், மத்திய கான்ட்ராக்ட் மூலம் வீராங்கனைகளுக்கு நிதி கிடைப்பதாகவும் அவர் பாராட்டு தெரிவித்துள்ளார். இதன்மூலம் சிறப்பாக விளையாட ஊக்கம் கிடைப்பதாகவும் அவர் மேலும் கூறினார்.

Related posts

Leave a Comment