அடுத்த நல்ல காரியம்… இந்தியாவை காப்பாற்ற துடிக்கும் டாடா, மஹிந்திரா… கேட்கவே பெருமையா இருக்கு…

கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில், இந்தியாவின் டாடா மற்றும் மஹிந்திரா ஆகிய நிறுவனங்கள் போட்டி போட்டு கொண்டு நல்ல காரியங்களை செய்து வருகின்றன.

கொரோனா வைரசுக்கு (கோவிட்-19) எதிராக தற்போது மனித இனம் யுத்தம் நடத்தி கொண்டிருக்கிறது. இந்த யுத்தத்தில் ஆட்டோமொபைல் நிறுவனங்கள் சிறப்பான பங்களிப்பை வழங்கி வருகின்றன. கொரோனா வைரஸ் மூச்சு திணறல் உள்ளிட்ட பிரச்னைகளை ஏற்படுத்துவதால், வென்டிலேட்டர்கள் தற்போது அதிகளவில் தேவைப்படுகின்றன.

எனவே வென்டிலேட்டர் தயாரிப்பு பணிகளில் உலகின் முன்னணி ஆட்டோமொபைல் நிறுவனங்கள் களம் இறங்கியுள்ளன. டெஸ்லா, ஃபோர்டு மற்றும் ஜென்ரல் மோட்டார்ஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் இதற்கு நல்ல உதாரணம். இந்தியாவை பொறுத்தவரை, மாருதி சுஸுகி மற்றும் மஹிந்திரா உள்ளிட்ட நிறுவனங்கள் வென்டிலேட்டர் தயாரிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றன.

வென்டிலேட்டர்கள் தவிர முக கவசத்தின் தேவையும் தற்போது உயர்ந்துள்ளது. பொதுமக்கள் மட்டுமல்லாது கோவிட்-19 வைரசுக்கு எதிரான போரில் முன் களத்தில் பணியாற்றி கொண்டிருக்கும் டாக்டர்கள், மருத்துவ பணியாளர்கள் மற்றும் காவல் துறையினர் போன்றோருக்கும் முக கவசங்கள் அதிக அளவில் தேவைப்படுகின்றன.

ஆனால் துரதிருஷ்டவசமாக டாக்டர்கள் மற்றும் செவிலியர்கள் உள்ளிட்ட சுகாதார பணியாளர்களும், காவல் துறையினரும் கோவிட்-19 வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. அவர்களுக்கு தேவையான பாதுகாப்பு உபகரணங்கள் போதிய அளவில் இல்லாமல் இருப்பதே இதற்கு முக்கியமான காரணங்களில் ஒன்றாக உள்ளது.

எனவே பல்வேறு முன்னணி நிறுவனங்களும், ஸ்டார்ட்-அப் நிறுவனங்களும் மாஸ்க் தயாரிக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றன. ஆனால் மாஸ்க் அணிந்திருந்தாலும் கூட, மருத்துவர்கள் போன்றோருக்கு கோவிட்-19 வைரஸ் தொற்று ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. ஏனெனில் மாஸ்க் அவர்களின் முகத்தை முழுவதுமாக கவர் செய்யாது.

ஆனால் ஃபேஸ் ஷீல்டு (Face Shield) பயன்படுத்தினால், இந்த பிரச்னையில் இருந்து தப்பிக்கலாம். இது முகத்தை முழுவதுமாக கவர் செய்யும் என்பதால், நல்ல பாதுகாப்பு கிடைக்கும். எனவே ஃபேஸ் ஷீல்டும் தற்போது அதிக அளவில் தேவைப்படுகிறது. இந்த பற்றாக்குறையை சமாளிக்க உதவும் வகையில், மஹிந்திரா நிறுவனம் ஃபேஸ் ஷீல்டு தயாரிப்பு பணிகளில் களம் இறங்கியுள்ளது.

தற்போது வரை 2.50 லட்சத்திற்கும் மேற்பட்ட ஃபேஸ் ஷீல்டுகளை மஹிந்திரா தயாரித்துள்ளது. முன்னதாக முக கவசங்களையும் மஹிந்திரா தயாரித்து வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது. கொரோனா வைரசுக்கு எதிரான போரில், இந்தியாவின் மஹிந்திரா நிறுவனம், தொடர்ந்து சிறப்பான பங்களிப்பை வழங்கி கொண்டுள்ளது.

இந்த வரிசையில் முக கவசங்களுக்கு அடுத்தபடியாக, ஃபேஸ் ஷீல்டுகளையும் அந்நிறுவனம் தயார் செய்து வருகிறது. கோவிட்-19 வைரஸின் பிடியில் இந்தியா சிக்கியிருக்கும் இக்கட்டான நேரத்தில், வென்டிலேட்டர், மாஸ்க் மற்றும் ஃபேஸ் ஷீல்டு என மஹிந்திரா நிறுவனம் அடுத்தடுத்து செய்து வரும் உதவிகள் பாராட்டத்தக்கவை.

முன்னதாக இந்தியாவில் கோவிட்-19 வைரஸ் பரவ ஆரம்பித்த சமயத்திலேயே, மஹிந்திரா குழும தலைவர் ஆனந்த் மஹிந்திரா நாட்டிற்கு உதவும் வகையில், பல்வேறு அதிரடியான அறிவிப்புகளை வெளியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. மஹிந்திரா நிறுவனம் இப்படிப்பட்ட உதவிகளை செய்து வரும் நிலையில், மறுபக்கம் டாடா குழுமம் 1,500 கோடி ரூபாய் நன்கொடையை அறிவித்துள்ளது.

Related posts

Leave a Comment