அரசு பலமுறை எச்சரித்தது.. கோயம்பேடு வியாபாரிகள் கேட்கவில்லை.. முதல்வர் பழனிச்சாமி விளக்கம்

சென்னை: அரசு பலமுறை எச்சரிக்கை விடுத்தும் கோயம்பேடு காய்கறி சந்தை வியாபாரிகள் நஷ்டம் ஏற்படும் என்ற அச்சத்தால் இடமாற்றத்தை ஏற்கவில்லை. இதுவே கொரோனா தொற்று பரவ காரணமாக அமைந்துவிட்டது என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி விளக்கம் அளித்துள்ளார். தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சி தலைவர்களுடன் இன்று வீடியோ கான்பிரன்ஸ் முறையில் ஆலோசனை நடத்தினார். அதன்பின்னர் முதல்வர் பழனிச்சாமி பேசுகையில், தமிழகத்தில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், தஞ்சாவூர், திருநெல்வேலி, அரியலூர் , பெரம்பலூர் உள்பட பல்வேறு மாவட்டங்களில் கொரோனா தொற்று அந்த மாவட்டத்திற்குள் பரவவில்லை என்றும், சென்னை போன்ற வெளிமாவட்டத்தில் இருந்து வந்த தொழிலாளர்கள் மூலம் பரவியது என்றும் மாவட்ட ஆட்சி தலைவர்கள் கூறினார்கள்.

கோயம்பேட்டில் ஆய்வு மாநிலத்தின் மற்ற பகுதிகளில் காய்கறி சந்தையை வேறு இடங்களுக்கு அரசு மாற்றிவிட்ட நிலையில் கோயம்பேடு காய்கறி சந்தையில் சமூக விலகல் கடைபிடிக்கப்படாத நிலையில், 29.03.2020 அன்று துணை முதல்வர் ஒ பன்னீர்செல்வம் நேரடியாக கோயம்பேடு சந்தைக்கு சென்று அங்கிருந்த வியாபாரிகள் சங்கத்தினரிடம் மக்கள் அதிகம் கூடுகிறார்கள். எனவே வேறு இடத்திற்கு மாற்றிவிடலாம் என்று வலியுறுத்தினார். ஆனால் கோயம்பேடு வியாபாரிகள் தங்களுக்கு நஷ்டம் ஏற்பட்டு விடும் என்று கூறி அதற்கு சம்மதிக்கவில்லை.

துணை முதல்வர் ஆலோசனை இதனிடையே மீண்டும் 6.4.2020 அன்று துணை முதல்வர் பன்னீர்செல்வம் தனது அலுவலகத்தில் கோயம்பேடு வியாபாரிகள் சங்க நிர்வாகிகளை அழைத்து ஆலோசனை நடத்தினார். அப்போது அரசு சார்பில் தற்காலிக இடம் அளிக்கப்படும் என்றும் அங்கு சென்று வியாபாரம் செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தினார். ஆனால் அவர்கள் சந்தையை வேறு இடத்திற்கு மாற்றினால் பெரும் நஷ்டம் என்று அச்சத்தினை வெளிப்படுத்தி வேறு இடம் மாற மறுத்துவிட்டனர்.

பலமுறை அரசு பேச்சுவார்த்தை இந்நிலையில் ஏப்ரல் 11ம் தேதி மீண்டும் அரசு பேச்சுவார்த்தை நடத்தியது. ஆனால் அப்போது கோயம்பேடு காய்கறி சந்தை வியாபரிகள் வேறு இடத்திற்கு இடம் மாறினால் தங்களுக்கு நஷ்டம் ஏற்படும் என்று அச்சம் தெரிவித்து இடம் மாற மறுத்துவிட்டனர். இப்படி அரசு பலமுறை தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தியது. இறுதியாக கோயம்பேட்டில் சமூக இடைவெளி இல்லை. முககவசம் அணியவில்லை. எனவே தொற்று ஏற்பட்டால் கடையை மூட வேண்டியது வரும் என்று எச்சரித்தது. ஆனால் தங்களுக்கு நஷ்டம் ஏற்பட்டு விடும் என்ற அச்சத்தால் வேறு இடங்களுக்கு செல்ல தொடர்ந்து மறுத்துவிட்டனர்.

தொற்றுக்கு காரணம் தொற்று ஏற்பட்ட உடன் இறுதியாக அரசு இனியும் கோயம்பேடு காய்கறி சந்தையில் வியாபாரம் செய்ய அனுமதிக்க முடியாது. மாற்று இடமான திருமழிசைக்கு செல்லுங்கள் என்று அறிவுறுத்தினோம். அதை அவர்கள் ஏற்றுக்கொண்டனர். அதன்பின்னர் திருமழிசை சந்தை 10.5.2020 முதல் செயல்படுகிறது. ஆனால் கோயம்பேடு சந்தை விஷயத்தில் அரசு உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்று பொய்யான செய்திகளை ஊடகங்களில் பரப்புகிறார்கள். அரசு உரிய நடவடிக்கை எடுத்தது. பல முறை சொல்லியும் வியாபாரிகள் நஷ்டம் ஏற்படும் என்ற அச்சத்தால் செல்லாததே தொற்று பரவ காரணம். மக்கள் நெருக்கம் அதிகமாக இருப்பதால் சென்னையில் கொரோனா தொற்று அதிகமாக இருக்கிறது.

அரசு உதவியது ஓரிரு நாளில் கோயம்பேடு உடன் தொடர்புடைய நோய் தொற்றுடன் உள்ள அனைவரும் கண்டுபிடிக்கப்படுவார்கள். அவர்களுக்கு தரமான சிகிச்சை அளிக்கப்படும். மக்களுக்கு என்னென்ன வழிகளில் நன்மை செய்ய முடியுமோ அத்தனை வழகளிலும் அரசு செய்தது. மக்களுக்கு எந்தெந்த வகையில் உதவ முடியுமோ அதையும் அரசு செய்தது. மக்களுக்கு சொல்வது எல்லாம் ஒன்று தான். இந்தியாவிலேயே மருத்துவ சிகிச்சை அளிப்பதில் தமிழகம் முதன்மையாக விளங்குகிறது. மருத்துவமனைகளில் இருந்து படிப்படியாக பலர் குணமடைந்து வீடு திரும்பி வருகின்றனர். அரசு சொல்லும் விழிப்புணர்வு வழிமுறைகளை கடைபிடிக்க வேண்டும். வெளியில் சென்றால் சமூக இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியில் சென்றுவிட்டு வீடு திரும்பினால் சோப்பு போட்டு கையை கழுவுங்கள் .இதை கடைபிடித்தாலோ நோய் பரவுவதை தடுக்கலாம். வெளிமாநிலத்தில் உள்ள தமிழர்களை மீட்பதற்கு படிப்படியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது” இவ்வாறு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பேசினார்.

Related posts

Leave a Comment