இந்தியா கைகொடுக்கலன்னா டெஸ்ட் கிரிக்கெட் அழிஞ்சிடும் -க்ரெக் சாப்பல்

டெல்லி : கொரோனா வைரஸ் காரணமாக சர்வதேச அளவில் டெஸ்ட் போட்டிகள் மிகுந்த பாதிப்புக்கு உள்ளாகியுள்ளதாக ஆஸ்திரேலிய ஜாம்பவான் மற்றும் முன்னாள் இந்திய பயிற்சியாளர் க்ரெக் சாப்பல் வருத்தம் தெரிவித்துள்ளார்.

டெஸ்ட் போட்டிகளை மீட்டெடுக்கும் முயற்சியில் இந்தியா ஈடுபடும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இந்தியா கைகொடுக்கவில்லை என்றால் கிரிக்கெட்டின் உண்மையான வடிவமான டெஸ்ட் கிரிக்கெட் அழிந்துவிடும் என்றும் அவர் கூறியுள்ளார்.

சிறப்பான பயிற்சியாளர்

இந்தியாவின் முன்னாள் பயிற்சியாளரும் ஆஸ்திரேலிய கிரிக்கெட்டின் ஜாம்பவானுமான க்ரெக் சாப்பல், இந்திய கிரிக்கெட் அணியில் இரண்டு ஆண்டுகள் பயிற்சியாளராக செயல்பட்டார். இவரது காலகட்டத்தில் இந்தியா தொடர்ந்து 17 வெற்றிகளை குவித்தது. மேலும் 35 ஆண்டுகளுக்கு பிறகு டெஸ்ட் போட்டிகளில் மேற்கிந்திய தீவுகளையும் முதல் முறையாக தென்னாப்பிரிக்காவையும் வெற்றி கொண்டது.

சச்சின் டெண்டுல்கர் கருத்து

அவர் இந்திய அணியின் பயிற்சியாளராக இருந்தபோது அவரின்கீழ் பணியாற்றியது மிகச்சிறந்த அனுபவம் என்று முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கர் கூறியுள்ளார். இதுகுறித்து தன்னுடைய ‘ப்ளேயிங் இட் மை வே’ என்ற புத்தகத்தில் க்ரெக் சாப்பல் வீரர்களிடம் ரிங் மாஸ்டர் போல செயல்பட்டதாக கூறியுள்ளார்.

க்ரெக் சாப்பல் நம்பிக்கை

இந்நிலையில், ப்ளேரைட் பவுண்டேஷனின் பேஸ்புக் பக்கத்தில் பேசியுள்ள க்ரெக் சாப்பல், இந்த கொரோனா வைரஸ் பாதிப்பு சமயத்தில் டெஸ்ட் கிரிக்கெட் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். ஆனால் டெஸ்ட் கிரிக்கெட்டை இந்தியா மீட்டெடுக்கும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இந்தியா கைவிட்டால் அழிந்துவிடும்

டெஸ்ட் கிரிக்கெட்டை இந்தியா கைவிட்டால் அது அழிந்துவிடும் என்றும் சாப்பல் கூறியுள்ளார். இந்தியா, ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகள் மட்டுமே, அதிகளவில் நிதி ஒதுக்கி டெஸ்ட் கிரிக்கெட்டிற்காக இளம் வீரர்களை தேர்ந்தெடுத்து வருவதாகவும் சாப்பல் குறிப்பிட்டுள்ளார். டெஸ்ட் போட்டிகளே கிரிக்கெட்டின் உண்மையான வடிவம் என்று இந்திய கேப்டன் கூறியுள்ள நிலையில் அது காப்பாற்றப்படும் என்று தான் நம்புவதாகவும் அவர் கூறியுள்ளார்.

அவரை போல நான் இதுவரை பார்த்ததில்லை

சாப்பலின் மிகசிறந்த கண்டுபிடிப்பு என்றால் முன்னாள் கேப்டன் எம்எஸ் தோனியை குறிப்பிடலாம். இந்நிலையில் தோனி முதல்முறை பேட்டிங் செய்தபோது தான் அவரது ஸ்டைலை கண்டு உறைந்து போனதாக சாப்பல் கூறியுள்ளார். அவர் எப்போதுமே பந்துகளை வித்தியாசமான கோணங்களில் எதிர்கொள்வார் என்றும் அவரை போல சிறந்த வலிமையான வீரரை தான் கண்டதில்லை என்றும் சாப்பல் தெரிவித்துள்ளார்.

Related posts

Leave a Comment