தங்கம் தென்னரசு குற்றச்சாட்டு

பத்தாம் வகுப்புத் தேர்வை ஜூன் முதல் வாரத்தில் நடத்த முனைவதையும்; கொரோனா தொற்று இன்னும் கட்டுப்படுத்தப்படாத நிலையில், பள்ளிகளைத் திறப்பதற்கான நடவடிக்கைகளை பள்ளிக் கல்வித்துறை அவசரமாக மேற்கொள்வதனையும் கண்டித்து, கழகத் தலைவர் அவர்கள் அறிவுரைப்படி நான் விடுத்துள்ள அறிக்கை.

“நிலைமையின் தீவிரத்தை உணராது பத்தாம் வகுப்புத் தேர்வை ஜுன் மாதம் முதல் வாரத்தில் நடத்த முயல்வதும், பள்ளிகளை அவசர அவசரமாக திறக்க முயற்சிப்பதும் தமிழ்நாட்டு மாணவர்களை ஆபத்தை நோக்கி அழைத்துச் செல்லும் வழிகளாகும்” என தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.
இந்தியத் திருநாடு கொரோனா நோய்த் தொற்றின் கோரப்பிடியில் சிக்கித் தவித்துக் கொண்டிருக்கிறது. பாதிக்கப்பட்ட ஏழை மக்களின் அவலக் குரல் எங்கும் எதிரொலிக்கத் துவங்கி இருக்கிறது. முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அரசின் செயலற்ற தன்மையாலும், தவறான முடிவுகளாலும் இந்த நோய்த்தொற்று தமிழகம் முழுவதும் மிக வேகமாகப் பரவி இன்று தமிழகம் இந்தியாவிலேயே மூன்றாவது இடத்திற்கு முன்னேறி அனைவரையும் அச்சத்தில் ஆழ்த்தி இருக்கின்றது.
அங்கொன்றும் இங்கொன்றுமாகத் துவங்கி இன்று தமிழகம் முழுமையும் சமூகப் பரவலாகவே மாறியுள்ள இந்த கொடிய நோய்த் தொற்றைத் தடுத்திட உரிய வழிவகைகளை உடனே காணாமல் தன் பொறுப்பை எளிதாகத் துறந்து பழியை மக்களின் மீது போட்டுத் தப்பித்துக் கொள்ள முதலமைச்சரே முயலும்போது, அவருக்குக் கீழே இருக்கின்ற அமைச்சர் பெருமக்களைப் பற்றிக் கேட்கவா வேண்டும்? கொரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை பத்தாயிரத்தைத் தொடப்போகும் நிலையில் வரும் நாட்களில் அந்த எண்ணிக்கை எல்லா மாவட்டங்களிலும் ‘கிடுகிடு’ உயர்வைச் சந்திக்கக்கூடும் என்ற அச்ச உணர்வு அனைவரின் மனதிலும் ஆழப் பதிந்துள்ள நிலையில் எதைப்பற்றியும் கவலைப்படாமல் தமிழகத்தின் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அவர்கள் பள்ளிகளைத் திறப்பது குறித்து அரசுக்கு ஆலோசனை வழங்க குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பு செய்துள்ளார்.
“கிடப்பதெல்லாம் கிடக்கட்டும் திண்ணையில் இருப்பதை தூக்கி மனையில் வை” என்பதைப் போல கொரோனா நோய்த் தொற்று சிறிதும் தணியாத சூழலில் குறிப்பாக, வரக்கூடிய ஓரிரு மாதங்களில் நோய்த் தொற்றின் விகிதம் பெருமளவு அதிகரிக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், பள்ளிகளை இப்போது அவசரமாகத் திறந்து மாணவர்களையும், ஆசிரியர்களையும், பெற்றோர்களையும் சார்புடைய பணியாளர்களையும் தெரிந்தே அபாயத்திற்கு உள்ளாக்கும் வகையில் அமைச்சரின் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டு இருப்பது கடும் கண்டனத்திற்குரியதாகும். அப்படி அமைக்கப்படும் குழுவில் கூட, ஒவ்வொரு நாளும் பள்ளிகளில் கண்ணுக்குத் தெரியாத நோய்க் கிருமியை எதிர்நோக்க வேண்டிய மாணவர்களின் சார்பாக அவர்தம் பெற்றோர்களையோ, ஆசிரியர் சங்கப் பிரதிநிதிகளையோ, நாடறிந்த நல்ல கல்வியாளர்களையோ, பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்களையோ இடம் பெறச் செய்யாது பள்ளிக் கல்வித்துறையின் அதிகாரிகளையும், உயர்கல்விக் கூட தொழில்நுட்ப நிபுணர்களையும் மட்டுமே இடம்பெறச் செய்திருப்பது எந்த வகையில் நியாயம் என்பதை புரிந்து கொள்ள முடியவில்லை.

Related posts

Leave a Comment