படிப்படியாக ஊரடங்கு தளர்வு :முதல்வர் இ.பி.எஸ்., உறுதி

சென்னை,: ”பாதுகாப்பு அரணாக இருந்து, தொழில் வளர்ச்சிக்கு, அரசு துணையாக இருக்கும். ஊரடங்கு தளர்வுகளை, அரசு படிப்படியாக அறிவிக்கும்,” என, முதல்வர் இ.பி.எஸ்., தெரிவித்தார்.குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் துறையினர், இந்திய தொழில் கூட்டமைப்பு மற்றும் சென்னை பன்னாட்டு மையம் அமைப்புகளை சேர்ந்த, தொழில் முனைவோருடன், இணையதளம் வழியாக பேசும் திட்டத்தை, முதல்வர், நேற்று துவக்கி வைத்தார்.

பின், அவர் பேசியதாவது:தமிழகத்தில், கொரோனா நோய், பல பாதிப்புகளை ஏற்படுத்தி உள்ளது. இந்நோயை எதிர்த்து போராடுவதற்கான, அனைத்து கட்டமைப்புகளையும், அரசு திறம்பட உருவாக்கி உள்ளது.கொரோனா நோய் தடுப்பு மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்களை, தமிழகத்தில் தயாரிக்க, சிறப்பு சலுகைகள் அறிவிக்கப்பட்டன. அதன் காரணமாக, 1,500 நிறுவனங்கள், உற்பத்தியை துவக்கி, இந்தியா முழுவதும் வழங்கி வருகின்றன.ஊரடங்கு கட்டுப்பாடுகளை, அரசு, படிப்படியாக தளர்த்தி வருகிறது. தற்போது, சென்னை தவிர்த்து, தமிழகத்தின் பிற பகுதிகளில், நிறுவனங்கள் செயல்பட துவங்கி உள்ளன. சூழ்நிலையை பொறுத்து, மேலும் தளர்வுகளை, அரசு படிப்படியாக வழங்கும்.தொழில் துறையினர் விழிப்போடு இருந்து, நோய் பரவலை தடுத்து, தகுந்த பாதுகாப்புடன் உற்பத்தியை தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும். மத்திய அரசு, குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு, பல்வேறு சலுகைகளை அறிவித்துள்ளது.அதை தொழில் நிறுவனங்கள் அதிகம் பெற்று, பயன் பெறுவதற்கான வழிமுறைகளை ஆராய்ந்து, அவற்றை ஊக்குவிக்க, தலைமை செயலர் மற்றும் துறை செயலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. தொழில் துறையினர் கோரிக்கைகள், அரசின் நிதிநிலை மற்றும் அதிகார வரம்பிற்கு உட்பட்டு பரிசீலிக்கப்படும்.தொழில் நிறுவனங்களுக்கு தேவையான, அனைத்து உதவிகளையும் செய்து, தற்போதைய பாதிப்பிலிருந்து மீட்டெடுத்தல்; புதிய முதலீடுகளை ஈர்த்தல்; அரசு அனுமதிகள் மற்றும் நடைமுறைகளை எளிதாக்கி, விரைவாக ஒப்புதல் வழங்குதல்; கடன் வழங்கும் நடைமுறைகளை எளிதாக்கி, பணப்புழக்கத்தை அதிகரித்தல் ஆகியவற்றில் கவனம் செலுத்த, அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தொழில் முனைவோர், என்னை சந்தித்து பேச விரும்பினால், 24 மணி நேரத்தில், நேரம் ஒதுக்கி தரப்படும். அதே நாளில், தலைமை செயலர் உள்ளிட்ட, மூத்த அதிகாரிகள், தங்களை சந்திப்பர்.மருத்துவம், பாதுகாப்பு, மின்சார வாகனங்கள், ஜவுளி போன்ற துறைகளுக்கு, சிறப்பு தொகுப்பு உருவாக்கப்படும். தொழில் முனைவோருக்கும், தொழில் துறையினருக்கும், தமிழக அரசு, என்றைக்கும் பாதுகாப்பு அரணாக இருந்து, தொழில் வளர்ச்சிக்கு துணையாக இருக்கும்.இவ்வாறு, முதல்வர் பேசினார்.

Related posts

Leave a Comment