ரசிகர்களை கவர்ந்த சாந்தனு – கீர்த்தி குறும்படம்

ஊரடங்கு நேரத்தில் தன் மனைவி கீர்த்தியுடன் இணைந்து சாந்தனு எடுத்த குறும்படம் ரசிகர்களை கவர்ந்துள்ளது.

ஊரடங்கு காரணமாக படப்பிடிப்பு வேலைகள் இன்றி வீட்டிலேயே இருக்கும் திரை நட்சத்திரங்கள் பலரும் தங்கள் மொபைல் போனில் எடுத்த குறும்படங்களையும், வீடியோக்களையும் சமூகவலைதளங்களில் தொடர்ந்து வெளியிட்டு வருகின்றனர்.

அந்த வகையில் நடிகர் சாந்தனு அவரது மனைவி கீர்த்தியுடன் இணைந்து வீட்டிலிருந்தே ஒரு குறும்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

காலை எட்டு மணிக்கு அலாரம் அடிக்கும் போது சாந்தனு தூக்கத்திலிருந்து கண் விழிப்பதாக அந்த குறும்படம் ஆரம்பமாகிறது. தொடர்ந்து காலையில் காபி போடுவது, சமையல் செய்வது, வீட்டை சுத்தம் செய்வது என்று அனைத்து வேலைகளையும் சாந்தனு செய்து கொண்டிருக்கிறார்.  மதிய சாப்பாட்டுக்கு தயிர்சாதம், ஊறுகாய் என சாந்தனு கூறியதும் ‘எனக்கு உருளைக்கிழங்கு பொரியல் வேண்டும். அது ஒன்றும் பெரிய வேலை இல்லை. எளிமையாக செய்து விட முடியும்’ என்று கீர்த்தி கேட்கிறார். அவரும் சரி என கூறிக்கொண்டே சமைக்க சென்று விடுகிறார்.

அனைத்து வேலைகளையும் முடித்துவிட்டு ஓய்வு எடுக்கலாம் என உட்காரும் போது தனக்கு கிரீன் டீ வேண்டும் என்று கீர்த்தி கேட்கிறார். அதை சமைத்துக் கொண்டு இருக்கும் சாந்தனு திடீரென அதிர்ச்சியடைகிறார். அப்போது தான் அனைத்தும் கனவு என்பது அவருக்குப் புரிகிறது. தொடர்ந்து, “கனவில் ஒரு நாள் வீட்டில் இருக்கும் பெண்களைப் போல வேலை செய்வதற்கே இத்தனை கஷ்டமாக இருக்கிறதே, இந்த குவாரன்டைன் முழுவதும் அவர்கள் வாழ்க்கை இப்படித்தான் போய்க் கொண்டிருக்கிறது.

இது நன்றிக்கு அப்பாற்பட்ட விஷயம். அவர்கள் செய்யும் வேலைகளில் கொஞ்சம் நாமும் கூட, மாட வேலை செய்தால் அவங்க பாரம் கண்டிப்பா கொஞ்சம் குறையும்.” என்று அவர் கூறுகிறார். ‘இந்த குவாரன்டைன்ல இருந்து நான் புதிய மாற்றத்தைக் கொண்டு வரப் போறேன்’ என்று கூறியவாறு கீர்த்திக்கு காபி போட்டுக் கொடுக்கிறார். இந்த வீடியோ ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

Related posts

Leave a Comment