‘இந்தியரை திருப்பி அழைத்து வர கூடுதல் விமானங்கள் இயக்கம்’ ; அமைச்சர் ஜெய்சங்கர்

புதுடில்லி : ‘வெளிநாடுகளில் தவிக்கும் இந்தியர்களை திருப்பி அழைத்து வர, கூடுதல் விமானங்கள் இயக்கப்பட உள்ளன’ என, வெளியுறவுத் துறை அமைச்சர், ஜெய்சங்கர், தெரிவித்துள்ளார்.

‘அமெரிக்காவில் தவிக்கும் மஹாராஷ்டிராவைச் சேர்ந்தவர்களை அழைத்து வர விமானங்களை இயக்க வேண்டும்’ என, மஹாராஷ்டிர முதல்வரும், சிவசேனா தலைவருமான உத்தவ் தாக்கரே, கோரிக்கை விடுத்திருந்தார்.இதற்கு பதிலளிக்கும் வகையில், சமூக வலை தளத்தில் வெளியிட்டுள்ள செய்திகளில், ஜெய்சங்கர் கூறியுள்ளதாவது:வந்தே பாரத் திட்டத்தின் கீழ், அமெரிக்கா, பிரிட்டன் உள்பட பல்வேறு நாடுகளில் இருந்து இந்தியர்களை அழைத்து வர, சிறப்பு விமானங்கள் இயக்கப்பட்டன.

மேலும், சில விமானங்களை இயக்கி வருகிறோம். அவ்வாறு வந்தவர் களுக்கு தேவையான உதவிகளை, மஹாராஷ்டிரா உட்பட அனைத்து மாநிலங்களும் சிறப்பாக செய்துள்ளன. அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு கூடுதல் விமானங்களை இயக்கத் திட்டமிட்டுள்ளோம். இவர்களுக்கு தேவையான உதவிகளை செய்யும்படி, மாநில அரசுகளை கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

இந்நிலையில், அமெரிக்காவில் தவிக்கும் இந்தியர்கள், ‘நாடு திரும்ப கூடுதல் விமானங்களை இயக்க வேண்டும்’ என, கோரிக்கை வைத்துள்ளனர்.குறிப்பாக, ‘ஹூஸ்டன் மற்றும் டல்லாஸ் நகரங்களில் இருந்து விமானங்களை இயக்க வேண்டும்’ என, அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.இது தொடர்பாக, இந்திய துாதரகம், வெளியுறவு அமைச்சகத்துக்கு, ஆன்லைன் மூலமாக அவர்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றனர்.நம் அண்டை நாடான இலங்கையில், கடந்த இரண்டு மாதங்களாக தவிக்கும், 2,400 இந்தியர்கள், நாடு திரும்புவது எப்போது என்ற கவலையில் ஆழ்ந்துள்ளனர்.

அங்குள்ள இந்தியத் துாதரகத்தை தினமும் தொடர்பு கொண்டு, அவர்கள் விசாரித்து வருவதாக, செய்திகள் தெரிவிக்கின்றன.’இந்தியாவில்தான் சாவேன்’மேற்காசிய நாடான, ஐக்கிய அரபு எமிரேட்சில் தவிக்கும், உடலின் சில பாகங்கள் செயல்படாத, ராகவன், 79, நாடு திரும்ப உதவும்படி கோரிக்கை விடுத்துள்ளார். அவர் கூறியதாவது:துபாயில், இரண்டு டெய்லர் கடைகளும், அஜ்மானில், ஏற்றுமதி தொழிலும் செய்து வந்தேன். என்னுடைய உறவினர் ஒருவர், அவற்றை கவனித்து வந்தார். கடைகளுக்கு செலுத்த வேண்டிய கட்டணத்தை அவர் செலுத்தாததால், எனக்கு, 12.4 லட்சம் ரூபாய் அபராதம் விதித்துள்ளனர்.

உடலின் சில பாகங்கள் செயல்படாததால், என்னால் தொழிலை கவனிக்க முடியவில்லை. இந்த அபராதத்தை செலுத்த முடியாததால், என்னுடைய, ‘விசா’வை நிறுத்தி வைத்துள்ளனர்.சமீபத்தில், சிகிச்சை பெற்றதற்காக, மருத்துவமனைக்கு செலுத்த வேண்டிய, 28.9 லட்சம் ரூபாயை, இந்தியத் துாதரகம் கேட்டுக் கொண்டதால், தள்ளுபடி செய்தனர். நான் கேரளாவில், என்னுடைய சொந்த ஊரில் தான் சாக வேண்டும் என, விரும்புகிறேன். நானும், என் மனைவி சரோஜினியும், 65, நாடு திரும்ப உதவ வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related posts

Leave a Comment