எச்சிலுக்கு தடை… வியர்வை ஓகே… ஐசிசி கமிட்டியின் முடிவு… முன்னாள் வீரர்கள் கண்டனம்

டெல்லி: உலகெங்கும் கொரோனா தலைவிரித்தாடுவதால், கிரிக்கெட் போட்டிகள் மீண்டும் தொடங்கும்போது, எச்சிலை வைத்து பந்தை ஷைன் ஆக்குவதற்கு தடை விதிக்க அனில் கும்ப்ளே தலைமையிலான ஐசிசி கமிட்டி பரிந்துரைத்துள்ளது. இதுதொடர்பாக நடந்த வீடியோ கான்பரன்ஸ் மீட்டிங்கின்போது பல்வேறு முடிவுகளையும் அனில் கும்ப்ளே தலைமையிலான கமிட்டி எடுத்தது. அதன்படி அனைத்து சர்வதேச போட்டிகளிலும் மீண்டும் 2 “நான் நியூட்ரல்” அம்பயர்களை அறிமுகம் செய்வது என தீர்மானிக்கப்பட்டது. அதேசமயம், வியர்வையால் பந்தை பாலிஷ் செய்வதைத் தடுக்க வேண்டியதில்லை என்ற முடிவையும் அனில் கும்ப்ளே கமிட்டி எடுத்துள்ளது. இருப்பினும் போட்டியின்போதும் போட்டிக்கு வெளியிலும் விளையாட்டு வீரர்கள் உள்ளிட்டோர் பேண வேண்டிய சுகாதார முறைகள் குறித்து கவனமுடன் இருக்க வேண்டியதன் அவசியத்தையும் எடுத்துரைத்தது.

கும்ப்ளே கமிட்டி முடிவு

இதுதொடர்பாக கும்ப்ளே கூறுகையில், நாம் இப்போது அசாதாரணமான காலகட்டத்தில் வாழ்ந்து வருகிறோம். இப்போது எடுக்கப்பட்டுள்ள முடிவுகள் அனைத்துமே தற்காலிகமானதுதான். பாதுகாப்பான முறையில் கிரிக்கெட் விளையாட்டுக்கு நாம் திரும்ப இது உதவும் என்று கும்ப்ளே கூறியுள்ளார். எச்சில் பயன்படுத்துவதை தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை சமீப காலமாக வலுத்து வந்தது. இந்த நிலையில் இந்த முடிவை ஐசிசி எடுத்துள்ளது.

அபாயகரமானது

டெஸ்ட் கிரிக்கெட்டில் பந்தை ஷைன் செய்வதற்கு எச்சிலைப் பயன்படுத்துவது வழக்கம். ஏன் என்றால் ஸ்விங் பவுலிங்குக்காக இப்படி செய்வார்கள் பவுலர்கள். ஆனால் தற்போது கொரோனா பரவல் காரணமாக இது அபாயகரமானதாக மாறியுள்ளது. எனவே இதற்கு தற்போது தடை விதிக்கப்பட்டுள்ளது. கொரோனாவுக்குப் பிறகு உலகமே பல விஷயங்களில் மாறி வருகிறது. அந்த வகையில் கிரிக்கெட்டிலும் இந்த மாற்றம் வந்துள்ளது.

வக்கார் யூனிஸ் கவலை

அதேசமயம், இதுபோல செய்வதால் ஸ்விங் பவுலிங்கே அழிந்து விடும். கிரிக்கெட்டில் சுவாரஸ்யம் போய் விடும் என்று முன்னாள் வேகப் பந்து வீச்சாளர்கள் வக்கார் யூனிஸ், மைக்கேல் ஹோல்டிங் ஆகியோர் கவலை தெரிவித்துள்ளனர். ஆனால் கும்ப்ளே இது தற்காலிமான முடிவு என்றுதான் கூறியுள்ளார். ஒரு வேளை கொரோனா முற்றிலும் ஒழிந்து இயல்பு நிலை திரும்பும்போது எச்சிலும் மீண்டும் திரும்பும் என்றே தெரிகிறது.

சொந்த நாட்டு அம்பயர்கள் நேற்றைய மீட்டிங்கில் எடுக்கப்பட்ட முடிவுகளில் இன்னொரு முக்கிய முடிவு 2 நடுநிலை இல்லாத அம்பயர்களை மீண்டும் கொண்டு வரும் முடிவாகும். தற்போது இரு தரப்பு போட்டிகளில் இரு நாடுகளையும் சேராத அம்பயர் (நியூட்ரல் அம்பயர்) பயன்படுத்தப்படுகிறார். இதை நீக்கி விட்டு போட்டியை நடத்தும் நாட்டின் அம்பயர்களை பயன்படுத்தும் முடிவை ஐசிசி எடுத்துள்ளது. விரைவில் இந்த முடிவுகளை ஐசிசி போர்டு அங்கீகரிக்கும். அதன் பின்னர் இவை நடைமுறைக்கு வரும்.

Related posts

Leave a Comment