மும்பை பாந்த்ரா ரயில் நிலையத்தில் திடீரென குவிந்த ஆயிரக்கணக்கான இடம்பெயர் தொழிலாளர்களால் பரபரப்பு

ம்பை: மும்பையின் பாந்த்ரா ரயில் நிலையத்தில் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக பரவிய வதந்தியை நம்பி ஆயிரக்கணக்கானபிற மாநில இடம்பெயர் தொழிலாளர்கள் ஒரே நேரத்தில் குவிந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. கொரோனா பரவுவதைத் தடுக்க நாடு முழுவதும் 4-ம் கட்ட லாக்டவுன் அமல்படுத்தப்பட்டுள்ளது. 4-ம் கட்ட லாக்டவுனில் பல்வேறு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன. பொதுவாக இயல்பு வாழ்க்கை திரும்பிக் கொண்டிருக்கிறது. அதேநேரத்தில் இடம்பெயர்ந்து பிற மாநிலங்களில் பணிபுரியும் தொழிலாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். லாக்டவுன் காலம் முழுவதும் வருமானம் இல்லாமல் சொந்த ஊருக்கு திரும்பவும் முடியாமல் பெரிதும் அவதிப்பட்டனர் இடம்பெயர் தொழிலாளர்கள்.

நடுவழியில் மரணங்கள்

இதனால் மே 1-ந் தேதி முதல் இந்த இடம்பெயர் தொழிலாளர்களை சொந்த மாநிலங்களுக்கு அழைத்துச் செல்ல சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த வசதியும் கிடைக்காத தொழிலாளர்கள் நடைபயணமாகவும் சைக்கிளிலும் சொந்த மாநிலம் திரும்புகின்றனர். இப்படி திரும்பும் வழியில் விபத்துகளில் சிக்கி தொழிலாளர்கள் மாண்டு போவது தேசத்தை உலுக்கி வருகிறது.

பாந்த்ரா ரயில் நிலையம்

இந்த நிலையில் மும்பை பாந்த்ரா ரயில் நிலையத்தில் இருந்து பீகாருக்கு சிறப்பு ரயில் இன்று இயக்கப்பட்டது. இதற்காக பதிவு செய்யப்பட்டிருந்த தொழிலாளர்கள் ரயில் நிலையத்துக்கு வருகை தந்தனர். அவர்களுக்கு உரிய பரிசோதனைகள் நடத்தப்பட்டன. அப்போது திடீரென ஆயிரக்கணக்கான இடம்பெயர் தொழிலாளர்கள் பாந்த்ரா ரயில் நிலையம் முன் திரண்டனர்.

ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள்

பாந்த்ரா ரயில் நிலையத்தில் இருந்து பல சிறப்பு ரயில்கள், பிற மாநிலங்களுக்கு இயக்கப்படுவதாக ஒரு தகவல் பரவியது. இதனை நம்பி பல ஆயிரக்கணக்கான இடம்பெயர் தொழிலாளர்கள் மூட்டை முடிச்சுகளுடன் பாந்த்ரா ரயில் நிலையம் நோக்கி திரண்டனர். பாந்த்ரா ரயில் நிலையம் சுற்றிய பகுதிகள் முழுவதிலும் இடம்பெயர் தொழிலாளர்கள் குவிந்ததால் போலீசார் செய்வது அறியாமல் திகைத்தனர்.

ஏமாற்றத்துடன் திரும்பினர்

இதன்பின்னர் இடம்பெயர் தொழிலாளர்களிடம் நிலைமையை போலீசார் விளக்கினர். தற்போது இயக்கப்படுவது ஏற்கனவே அரசிடம் முன்பதிவு செய்தவர்களுக்கான ரயில் என்றும் விளக்கம் அளிக்கப்பட்டது. இதனால் மிகுந்த ஏமாற்றத்துடன் இடம்பெயர் தொழிலாளர்கள் வீடுகளுக்கு திரும்பினர். லாக்டவுன் அறிவிக்கப்பட்ட போதே பாந்த்ரா ரயில் நிலையத்தை தொழிலாளர்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Related posts

Leave a Comment