2020 டிஎன்பிஎல் டி20 தொடர் தள்ளி வைப்பு.. தமிழ்நாடு கிரிக்கெட் அமைப்பு அறிவிப்பு!

சென்னை : 2020 தமிழ்நாடு பிரீமியர் லீக் டி20 தொடர் தேதி அறிவிக்கப்படாமல் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. தமிழக அளவில் நடத்தப்பட்டு வந்தது தமிழ்நாடு பிரீமியர் லீக் தொடர் கடந்த நான்கு ஆண்டுகளாக நடத்தப்பட்டு வந்தது. அந்த தொடரின் ஐந்தாவது சீசன் ஜூன் 10, 2020 அன்று துவங்க இருந்தது. தற்போது கொரோனா வைரஸ் காரணமாக அமலில் லாக்டவுன் மற்றும் பல்வேறு நடைமுறை சிக்கல்கள் காரணமாக அந்த தொடர் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் காரணமாக கடந்த இரு மாதங்களாக உலகின் பல்வேறு விளையாட்டுத் தொடர்கள் தடைப்பட்டுள்ளன. குறிப்பாக கிரிக்கெட் போட்டிகள் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. பிரம்மாண்ட டி20 தொடரான ஐபிஎல் மார்ச் 29 அன்று துவங்க இருந்த நிலையில், கொரோனா வைரஸ் அச்சம் மற்றும் லாக்டவுன் காரணமாக கால வரையின்றி தள்ளி வைக்கப்பட்டுள்ளது. ஐபிஎல் தொடர் தள்ளி வைக்கப்பட்டதால் அதை பின்பற்றி மாநில அளவில் நடத்தப்பட்டு வரும் டி20 தொடர்களும் தள்ளி வைக்கப்படும் என கருதப்பட்டது. அதே போல தமிழ்நாடு பிரீமியர் லீக் (டிஎன்பிஎல்) தள்ளி வைக்கப்பட்டுள்ளது. 2020 டிஎன்பிஎல் தொடரில் சேலம் ஸ்பார்டன்ஸ், சேப்பாக் சூப்பர் கில்லீஸ், லைகா கோவை கிங்ஸ், மதுரை பாந்தர்ஸ், திருச்சி வாரியர்ஸ், காஞ்சி வீரன்ஸ், திண்டுக்கல் டிராகன்ஸ், திருப்பூர் தமிழன்ஸ் உள்ளிட்ட எட்டு அணிகள் பங்கேற்க இருந்தன.

முதலில் லீக் சுற்று, பின்னர் பிளே-ஆஃப், இறுதிப் போட்டி என முழு தொடருக்கான திட்டமும் தயார் செய்யப்பட்டு அதற்கான அட்டவணை கடந்த மார்ச் மாதம் வெளியிடப்பட்டது. அதன் பின் கொரோனா வைரஸ் தாக்கம் இந்தியாவில் அதிகரித்தது. அதனால் லாக்டவுன் அறிவிக்கப்பட்டு அது தொடர்ந்து நீடிக்கப்பட்டுள்ளது. தற்போது தமிழ்நாட்டில் 25 மாவட்டங்களுக்கு மட்டுமே தளர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. அதிலும் போக்குவரத்துக்கு கடும் கட்டுப்பாடுகள் உள்ளது. அதனால், டிஎன்பிஎல் தொடரை திட்டமிட்டபடி நடத்த முடியாது. இந்த நிலையில், தமிழ்நாடு கிரிக்கெட் அமைப்பு 2020 டிஎன்பிஎல் தொடரை தள்ளி வைப்பதாக அறிவித்துள்ளது. மாற்றப்பட்ட போட்டி அட்டவணை பின்னர் அறிவிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளது.

Related posts

Leave a Comment