அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிகளில் 4 ஆயிரம் செயற்கை சுவாச கருவிகள் – அமைச்சர் சி.விஜயபாஸ்கர்

தமிழ்நாட்டில் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிகளில் 4 ஆயிரம் செயற்கை சுவாச கருவிகள் இருப்பதாக அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

சென்னை:

தமிழ்நாட்டிலேயே சென்னையில் தான் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இதை கட்டுப்படுத்த அரசு தீவிர நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. இதேபோல் மற்ற மாவட்டங்களில் ஓரளவு நிலைமை கட்டுக்குள் வந்துவிட்டது. சென்னையில் மட்டும் தினமும் 500-க்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா தொற்று தொடர்ந்து கண்டறியப்பட்டு வருகிறது.

தமிழ்நாட்டில் இதுவரை மொத்தம் 13 ஆயிரத்து 191 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் சென்னையில் மட்டும் 8,228 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.இதில் 6 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர். மற்றவர்களுக்கு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

சென்னையில் மட்டும் 61 பேர் மரணம் அடைந்து இருக்கிறார்கள்.

சென்னையில் கொரோனாவை கட்டுப்படுத்துவதற்காக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வந்தாலும் அதன் பாதிப்பை இன்னும் முழுமையாக கட்டுப்படுத்த முடியவில்லை. இது பெரும் கவலையை ஏற்படுத்தி வருகிறது.

இதுகுறித்து சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் ‘மாலை மலர்’ நிருபரிடம் கூறியதாவது:-

தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு சென்னையில் மட்டுமே அதிகம் காணப்படுகிறது. மற்ற மாவட்டங்களில் கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்தி விட்டோம்.

சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் தான் கொரோனா தொற்று கண்டறியப்பட்டு வருகிறது. தமிழகத்தில் 25-க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் புதிதாக கொரோனா தொற்று ஏற்படவில்லை. அங்கு சகஜ நிலைமை திரும்பி உள்ளது. ஆனாலும் அங்கு ஏற்கனவே கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகிறோம்

ஆஸ்பத்திரிகளில் சிறந்த சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருவதால் 5,882 பேர் இதுவரை சிகிச்சை பெற்று வீடு திரும்பி உள்ளனர். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதன் மூலம் பலர் விரைவில் குணம் அடைந்து வருகிறார்கள்.

சென்னையில் தினமும் 12 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்படுவதால் கொரோனா தொற்று உட னுக்குடன் கண்டுபிடிக்கப்படுகிறது. தற்போது வீடு வீடாகவும் சென்று தெர்மல் பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது.

கபசுர குடிநீர் வழங்கப்படுவதுடன் சத்து மாத்திரைகளும் கொடுக்கப்படுகிறது. கொரோனா தொற்று பாதித்தவர்களை கண்டறிந்து அவர்களுக்கு தகுந்த சிகிச்சைகளை மேற்கொள்ளும் வகையில் தேவையான படுக்கை வசதிகளும் ஆஸ்பத்திரிகளில் தயார் நிலையில் உள்ளது. இதுதவிர தனியார் கல்லூரிகளிலும், திருமண மண்டபங்களிலும் படுக்கை வசதிகள் உருவாக்கப்பட் டுள்ளன. மொத்தத்தில் 29 ஆயிரம் படுக்கைகள் தயார் நிலையில் உள்ளது.

மாவட்ட அளவிலும், தாலுகா அளவிலும் ஆஸ்பத்திரிகள் இருந்தாலும் கூடுதலாக தற்காலிக ஆஸ்பத்திரிகளை உருவாக்கி வைத்துள்ளோம். நோய் தொற்றுக்கு ஆளானவர்களுக்கு அரசு ஆஸ்பத்திரியில் உயர்தர சிகிச்சை கொடுத்து வருகிறோம்.

பரிசோதனை முடிவுகளுக்காக காத்திருப்பவர்கள் மற்றும் 14 நாட்கள் தனிமைப்படுத்தி கொள்பவர்கள் கல்லூரிகளில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளான கழிவறை வசதி, மின்விளக்கு, மின்விசிறி போன்றவற்றையும் உருவாக்கி கொடுத்துள்ளோம்.

ஆஸ்துமா நோயாளிகள், நீரழிவால் பாதிக்கப்பட்டவர்கள், இருதய பிரச்சினை உள்ளவர்கள், கர்ப்பிணிகள், புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள், டயாலிசிஸ் செய்பவர்கள் போன்றவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும்.

இவர்களை கண்டறிந்து சிறப்பு கவனம் செலுத்தி குணப்படுத்தி வருகிறோம். இவர்களுக்கு மட்டுமே வெண்டிலேட்டர் தேவைப்படுகிறது. மற்றவர்களுக்கு அந்த அளவு செயற்கை சுவாச கருவிகள் தேவைப்படுவது இல்லை.

தமிழ்நாட்டில் 4 ஆயிரம் செயற்கை சுவாச கருவிகள் இருப்பதால் வெண்டிலேட்டர் தட்டுப்பாடு என்ற பேச்சுக்கே இடமில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

Related posts

Leave a Comment