சட்டசபை தேர்தலுக்கு வலுவான கூட்டணி அமைக்க கமல்ஹாசன் திட்டம்

ரஜினிகாந்த், காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகளை ஒருங்கிணைத்து சட்டசபை தேர்தலுக்கு வலுவான கூட்டணி அமைக்க கமல்ஹாசன் திட்டமிட்டுள்ளார்.

சென்னை:

கொரோனா பரபரப்பு ஓயத்தொடங்கி இருப்பதால் நடிகர் கமல்ஹாசன் சட்டமன்ற தேர்தலுக்கு வலுவான கூட்டணி அமைக்க தயாராகி வருகிறார்.

இது குறித்து அவரது கட்சி நிர்வாகிகள் கூறியதாவது:-

தமிழகத்தை அரை நூற்றாண்டு காலமாக ஆண்டு வரும் 2 பெரிய கட்சிகளையும் எதிர்த்து களம் இறங்க இருக்கிறோம். தி.மு.க., அ.தி.மு.க. ஆகிய 2 கட்சிகளுமே எங்களுக்கு எதிரிகள் தான். பா.ஜனதாவுடனும் கூட்டணி சேர வாய்ப்பு இல்லை. திராவிட கட்சிகளின் மீது வெறுப்பில் இருப்பவர்கள் வாக்குகள் கிடைக்கும் என்றாலும் அது போதாது.

எனவே நாங்கள் ஆட்சியை பிடிக்க வலுவான கூட்டணி தேவை. ஏற்கனவே திட்டமிட்டப்படி இந்த கூட்டணியில் நிச்சயம் ரஜினி இணைவார். அவரது கொள்கைகள் குறிப்பாக ஊழலுக்கு எதிரான அவரது கருத்துகள் மக்கள் நீதி மய்யம் கட்சியின் கொள்கையை பிரதிபலிப்பது போல் தான் அமைந்தன.

எங்கள் தலைமையிலான கூட்டணியில் தி.மு.க., அ.தி.மு.க. கூட்டணிகளில் அதிருப்தியில் இருக்கும் கட்சிகள் குறிப்பாக காங்கிரசும் கம்யூனிஸ்ட் கட்சிகளும் இணையும். காங்கிரஸ் கட்சியுடன் கடந்த பாராளுமன்ற தேர்தலிலேயே இணைந்திருக்க வேண்டியது.

கம்யூனிஸ்ட் கட்சிகளுடன் கமல் எப்போதுமே தோழமையுடன் தான் இருக்கிறார். எனவே இவர்களுடன் இணைவதில் பிரச்சினை இல்லை. கூட்டணியில் அதிருப்தியில் இருக்கும் திருமாவளவன் போன்றோரும் கைகோர்க்கும்போது எங்கள் கூட்டணி பிரம்மாண்டமான கூட்டணியாக மாறும்.

கமல், ரஜினி இணையும்போது விஜய், சூர்யா, விஜய் சேதுபதி என திரையுலகில் சமூக வி‌ஷயங்களை பேசும் இளம் நடிகர்கள் அந்த கூட்டணிக்கு ஆதரவு தருவார்கள். அவர்களுக்கு இணக்கமான தலைவர் கமல்ஹாசன் தான். எனவே கூட்டணி இன்னும் வலுவாக மாறும்.

தலைமையை பொறுத்தவரை கமல் தான் பிரதானமாக இருப்பார். ஒருவேளை ரஜினி அதற்கு சம்மதிக்காத பட்சத்தில் இரட்டை தலைமை கொண்ட கூட்டணியாக கூட அமையலாம். எங்களிடம் கட்சிக்கான அடிப்படை கட்டமைப்பும் தேர்தலை சந்தித்த அனுபவமும் இருக்கிறது.

ரஜினியின் மாஸ் இதில் சேர்ந்தால் தான் எல்லோருக்குமே நல்லது. அதை அவரும் உணர்ந்துள்ளார்.

கமல், ரஜினி இருவரது கவலையுமே அவர்களது ரசிகர்களின் மோதல் தான். ஆனால் அந்த மோதல் கூட இருவரும் இணைந்து விடக்கூடாது என்று நினைக்கும் கட்சிகள் பொய்யாக செய்யும் வேலை.

கமல், ரஜினி இருவருமே ரசிகர்களை மட்டுமே நம்பாமல் பொதுவான வாக்குகளை தான் குறி வைக்கிறார்கள். அடுத்த சில நாட்களில் கொரோனா தீவிரம் முடிந்த உடன் கமல்ஹாசனின் அரசியல் வேகம் எடுக்கும்.

அதன் பிறகு கூட்டணிக்கான ஏற்பாடுகள், பேச்சுவார்த்தை தொடங்கும். காத்திருங்கள். சில ஆச்சர்யமான வி‌ஷயங்கள் நடக்கும்’.

Related posts

Leave a Comment