வீடு வீடாக பரிசோதனை : அமைச்சர் விஜயபாஸ்கர்

சென்னை : சென்னையில் வீடு வீடாக பரிசோதனை செய்யும், நம்ம சென்னை கொரோனா தடுப்பு திட்டத்தை, சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் துவக்கி வைத்தார்.

இத்திட்டத்தை, ராயபுரம் மண்டலத்தில் உள்ள, பி.ஆர்.என்., தோட்ட பகுதியில், நேற்று துவக்கி வைத்த பின், அமைச்சர் விஜயபாஸ்கர் அளித்த பேட்டி:சென்னையில் கொரோனா வைரசை தடுக்க, மாநகராட்சி பல்வேறு திட்டமிடலுடன் பணிகளை மேற்கொண்டு வருகிறது. வைரஸ் தொற்று பாதித்த கட்டுப்பாடு பகுதிகளில், கபசுர குடிநீர், ‘ஜிங்க், விட்டமின் சி’ ஆகிய ஊட்டச்சத்து மாத்திரைகள், தொடர்ந்து, 10 நாட்களுக்கு நடமாடும் வாகனங்கள் வாயிலாக வினியோகிக்கப்படுகிறது.

இதுவரை, 5.20 லட்சம் கபசுர குடிநீர் பொட்டலங்கள் வழங்கப்பட்டு உள்ளன. கொரோனா வைரஸ் தொற்றை தடுக்க, முக கவசம் அணிதல், அடிக்கடி கைகளை சோப்பு போட்டு கழுவுதல், சமூக இடைவெளியை கடைப்பிடித்தல் போன்றவை சிறந்த வழிமுறைகள். இதற்காக, குடிசைப் பகுதியில் உள்ள, 26 லட்சம் மக்களுக்கு, மாநகராட்சியின் சார்பில், ஒருவருக்கு, மூன்று முக கவசங்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

கொரோனா தொற்றை முழுவதுமாக கட்டுப்படுத்த, பொது மக்களின் ஒத்துழைப்பும், சமுதாய பங்களிப்பும் மிகவும் அவசியமானது.கொரோனா வைரஸ் தொற்றை தடுக்க, அடுத்தகட்ட நடவடிக்கையாக, பாதிப்பு அதிகமான கட்டுப்பாடு பகுதிகளில், ‘நம்ம சென்னை கொரோனா தடுப்பு திட்டம்’ துவங்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தில், 500 சுகாதார ஆய்வாளர்கள், வைரஸ் தொற்று தடுப்பு பணிகளில் ஈடுபட உள்ளனர். முதற்கட்டமாக, 165 சுகாதார ஆய்வாளர்கள், ராய புரம் மண்டலத்தில் பணிகளை துவக்கியுள்ளனர்.

இவர்கள், கட்டுப்பாடு பகுதிகளில், ஒவ்வொரு வீட்டிற்கும் சென்று, பொது மக்களுக்கு சளி, இருமல், காய்ச்சல் போன்ற அறிகுறிகள் இருக்கிறதா என, பார்ப்பர்; தேவைப்பட்டால், அவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்படும். தொற்று இருப்பின், மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அழைத்து செல்ல நடவடிக்கை மேற்கொள்வர்.அவர்களோடு தொடர்பில் இருந்த நபர்களை கண்டறிந்து, அவர்களுக்கு பரிசோதனை மேற்கொள்வர். பொது மக்களின் பகுதிகளுக்கே சென்று, நுரையீரல் சம்பந்தமான பரிசோதனை மேற்கொள்ள, நடமாடும் எக்ஸ்-ரே வாகனங்கள் உள்ளன.
மாநகராட்சியில் உள்ள, 200 வார்டுகளில், 167 வார்டுகளில், 10க்கும் குறைவான நபர்களுக்கே, வைரஸ் தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 33 வார்டுகளில் மட்டுமே பாதிப்பு அதிகமாக உள்ளது. இந்த பகுதிகளில், சென்னை மாநகராட்சி மற்றும் பொது சுகாதாரத்துறை சார்பில், பல்வேறு பணிகள் ஒருங்கிணைக்கப்பட்டு, நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.தமிழகத்தில் இதுவரை, 3.26 லட்சம் பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. அதில், சென்னையில் மட்டும், 85 ஆயிரம் பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. இவ்வாறு, அவர் கூறினார்.

Related posts

Leave a Comment