நீண்ட இடைவெளிக்கு பின் டில்லி வரும் எம்.பி.,க்கள்: நிலைக்குழு கூட்ட ஏற்பாடுகளில் அதிகாரிகள் தீவிரம்

வரும் திங்கள் முதல், உள்ளூர் விமானப்போக்குவரத்து துவங்கவுள்ளதால், நீண்ட நாட்களாக நடைபெறா மல் இருந்த, பார்லிமென்ட் நிலைக்குழு கூட்டங்கள், விரைவில் துவங்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

ஆலோசனை


ஏப்ரல் 3ம் தேதி வரை நடத்தப்பட வேண்டிய பட்ஜெட் கூட்டத்தொடர், கொரோனா வைரஸ் பரவலின் தீவிரத்தால், மார்ச் 23ம் தேதியே முடிவுக்கு வந்தது.பார்லி.,யின் அலுவல்கள், முன்கூட்டியே முடித்துக் கொள்ளப்பட்டதற்கு, விமான போக்குவரத்து முற்றிலுமாக நிறுத்தப்பட்டதும், முக்கிய காரணம். இதனால், நிலைக்குழு கூட்டங்களையும் நடத்த முடியாத நிலை ஏற்பட்டது.இந்த கூட்டங்களை, ‘வீடியோ கான்பரன்ஸ்’ வாயிலாக நடத்தலாம் என்ற யோசனை முன்வைக்கப்பட்டாலும், அதில் அரசின் முக்கிய தகவல்கள் கசியும் வாய்ப்பு இருப்பதாக, அச்சம் எழுந்தது.

இதையடுத்து, 7ம் தேதி, லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லாவும், ராஜ்யசபா தலைவர் வெங்கையா நாயுடுவும், நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தினர். அப்போது, ‘ரகசியங்கள் கசிந்துவிடாதபடி, டிஜிட்டல் முறையில் ஆலோசனை நடத்துவதற்கு உண்டான வழிமுறைகளை ஆராயலாம்’ என இருவரும்முடிவெடுத்தனர்.இந்நிலையில், மத்திய அரசு ஊரடங்கு தளர்வு நடவடிக்கையை அறிவித்து, அதன் ஒரு பகுதியாக,, நாளை மறுநாள் முதல், உள்நாட்டு விமான போக்குவரத்து சேவை துவங்கப்படவுள்ளது.

அட்டவணை தயாரிப்புமுக்கிய நகரங்கள் உட்பட அனைத்து மாநில தலைநகரங்களிலிருந்தும், டில்லிக்கு, விமானங்கள் இயக்கப்படஉள்ளன.இதையடுத்து, லோக்சபா மற்றும் ராஜ்யசபா செக்ரட்டரி ஜெனரல்கள், நேற்று, ஓம் பிர்லா மற்றும் வெங்கையா நாயுடு இருவரையும் நேரில் சந்தித்து, நிலைக்குழு கூட்டங்களை, மீண்டும் துவங்குவது குறித்து விளக்கினர்.

இதையடுத்து, துறை வாரியாக, நிலைக்குழு கூட்டங்களை நடத்துவது குறித்த தேதிகள், அட்டவணை தயாரிப்பு பணிகள், ஆரம்பமாகிஉள்ளன.இது குறித்த தகவல்கள், ஓரிரு நாட்களில், எம்.பி.,க்களுக்கு போய் சேரவுள்ளன.பார்லிமென்ட் வரலாற்றில், இத்தனை நாட்களாக, எம்.பி.,க்கள் வராமல், வெறிச்சோடி காணப்பட்டதில்லை. தற்போது, அந்த காட்சி மாறி, பார்லிமென்ட் பழைய நிலைக்கு திரும்பப் போகிறது. வெகு விரைவில், எம்.பி.,க்கள், டில்லிக்கு படையெடுக்கப்போகின்றனர். – நமது டில்லி நிருபர் –

Related posts

Leave a Comment