விருதுநகர் மாவட்டத்தில் பாதிப்பு 100-ஐ கடந்தது – மதுரை, விருதுநகரில் ஒரே நாளில் 50 பேருக்கு கொரோனா

மதுரை, விருதுநகரில் நேற்று ஒரே நாளில் 50 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. மேலும் விருதுநகர் மாவட்டத்தில் பாதிப்பு எண்ணிக்கை 100-ஐ கடந்தது.

விருதுநகர்:

மும்பை, குஜராத், மத்திய பிரதேசம் ஆகிய இடங்களில் இருந்து மதுரை வந்த 33 பேருக்கு நேற்று கொரோனா உறுதி செய்யப்பட்டது.

இவர்களில் மதுரை தனிச்சியம் பகுதியைச் சேர்ந்த 45 வயது ஆண், 29 வயது பெண், திருமங்கலம் அருகே உள்ள தங்களசேரி பகுதியைச் சேர்ந்த 52 வயது ஆண், உசிலம்பட்டி அருகே உள்ள மூப்புபட்டி பகுதியைச் சேர்ந்த 40 வயது பெண், 43 வயது பெண், 21 வயது பெண், 18 வயது பெண், விக்கிரமங்கலம் பகுதியை சேர்ந்த 47 வயது பெண், 20 வயது பெண்.

உசிலம்பட்டியை சேர்ந்த 24 வயது பெண், விக்கிரமங்கலம் இரவாப்பட்டி பகுதியைச் சேர்ந்த 34 வயது ஆண், டி.புதுப்பட்டி பகுதியைச் சேர்ந்த 26 வயது ஆண், 27 வயது ஆண், செக்கானூரணி பகுதியைச் சேர்ந்த 30 வயது பெண், கோதம்பட்டி பகுதியை சேர்ந்த 55 வயது ஆண், மதுரை திடீர் நகர் பகுதியை சேர்ந்த 18 வயது ஆண், திருமங்கலம் அருகே உள்ள புதுப்பட்டி பகுதியை சேர்ந்த 14 வயது சிறுவன், 12 வயது சிறுமி, புளியம்பட்டி பகுதியைச் சேர்ந்த 50 வயது ஆண், வில்லாபுரம் பகுதியை சேர்ந்த 27 வயது ஆண், பீ.பீ.குளம் இந்திராநகர் பகுதியை சேர்ந்த 28 வயது. இவர்கள் 21 பேரும் மதுரை மாவட்டத்தை சேர்ந்தவர்கள்.

இதுபோல் இவர்களுடன் வெளிமாநிலங்களில் இருந்து வந்த தூத்துக்குடியை சேர்ந்த 5 பேர், தேனி மாவட்டத்தை சேர்ந்த ஒருவர், நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த ஒருவர், விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த 5 பேர் ஆகியோரும் மதுரை வந்தனர். இவர்கள் 12 பேருக்கும் நேற்று கொரோனா உறுதி செய்யப்பட்டது.

மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த 21 பேர் மற்றும் பிற மாவட்டத்தைச் சேர்ந்த 12 பேர் என மொத்தம் 33 பேரும், இங்கிருந்து மும்பை, டெல்லி, குஜராத், மத்திய பிரதேசம் உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று அங்கு தங்கி பல்வேறு வேலை பார்த்து வந்தவர்கள். தற்போது ஊரடங்கு காரணமாக அங்கிருந்து மதுரை திரும்பிய நிலையில் இவர்கள் அனைவரும் ஒத்தக்கடை பகுதியில் உள்ள வேளாண்மை கல்லூரி, திருமங்கலம், கள்ளிக்குடி ஆகிய பகுதிகளில் அமைக்கப்பட்டிருந்த கண்காணிப்பு முகாம்களில் தனிமைப்படுத்தப்பட்டு இருந்தனர்.

இந்தநிலையில் இவர்களுக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

கொரோனா உறுதி செய்யப்பட்ட இவர்கள் 33 பேரும் ஆம்புலன்ஸ் மூலம் நேற்று மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து வரப்பட்டு அங்குள்ள கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார்கள். இதுபோல் இவர்களுடன் வந்த ஏராளமானவர்கள் மதுரை, விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கண்காணிப்பு முகாம்களில் தங்க வைக்கப்பட்டிருக்கிறார்கள்.

இவர்களின் ரத்த மாதிரிகள் பரிசோதனைக்காக எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது. அவர்களிலும் பலருக்கு கொரோனா இருக்க வாய்ப்பிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

மதுரை நகர் பகுதியான வில்லாபுரம், பீ.பீ.குளம், திடீர் நகர் ஆகிய பகுதிகளில் நேற்று 3 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதால் அவர்கள் தங்கியிருந்த பகுதிகளை சுற்றிலும் சீல் வைத்து தெருக்கள் அனைத்தும் அடைக்கப்பட்டன. மேலும் சுகாதாரத்துறை மூலம் கிருமி நாசினி தெளிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. நேற்றுடன் மதுரையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 224-ஆக உயர்ந்துள்ளது.

மற்ற மாவட்டங்களில் இருந்து வந்தவர்களின் எண்ணிக்கை அந்தந்த மாவட்ட பாதிப்பு விவரங்களில் கணக்கிடப்படும் என்றும், எனவே அதன் மூலம் மதுரை மாவட்டத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 224-ல் இருந்து குறைய வாய்ப்பு இருப்பதாகவும் டாக்டர்கள் தெரிவித்தனர்.

கொரோனா பாதித்து சிகிச்சையில் இருந்த மதுரை ஊர்மெச்சிகுளம் பகுதியைச் சேர்ந்த 24 வயது நபர், நெல்லுகுண்டுபட்டி பகுதியைச் சேர்ந்த 40 வயது நபர் ஆகியோர் பூரண குணம் அடைந்ததை தொடர்ந்து நேற்று வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இதன் மூலம் மதுரையில் கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 115-ஆக உயர்ந்துள்ளது.

விருதுநகர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் 12 பேருக்கு கொரோனா உறுதியானது. இந்த நிலையில் நேற்று மேலும் 17 பேருக்கு பாதிப்பு உறுதியாகி உள்ளது.

அதாவது, விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த தொழிலாளர்கள் 200-க்கும் மேற்பட்டவர்கள் டெல்லியில் பல்வேறு இடங்களில் தங்கி கூலித்தொழிலாளர்களாக வேலை செய்து வந்தனர். தற்போதைய ஊரடங்கால் கடந்த 2 மாதமாக அங்கேயே முடங்கி கிடந்தனர். தற்போது அவர்கள் சிறப்பு ரெயில் மூலம் சொந்த ஊர் திரும்பினர். இதில் விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த 158 ஆண்கள், 12 பெண்கள், 2 குழந்தைகள் என மொத்தம் 172 பேர் ஆமத்தூர் அருகில் உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் தனிமைப்படுத்தப்பட்டு இருந்தனர்.

இவர்களுக்கு கொரோனா தொற்று இருக்கிறதா? என்பதை கண்டறிய மருத்துவ பரிசோதனை நடந்தது. இவர்களில் 60 பேருக்கான பரிசோதனை முடிவுகள் நேற்று அறிவிக்கப்பட்டன. அதில் 17 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர்களை சிவகாசியில் உள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக சுகாதாரத்துறையினரும், மாவட்ட நிர்வாகமும் அனுப்பி வைத்தது. அதன்பேரில் அவர்கள் அங்கு கொரோனா சிறப்பு வார்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இது குறித்து சிவகாசி அரசு ஆஸ்பத்திரியின் தலைமை டாக்டர் அய்யனார் கூறியதாவது:-

வெளிமாநிலங்களில் இருந்து விருதுநகர் மாவட்டம் திரும்பியவர்களில் 17 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களுக்கு சிவகாசி அரசு ஆஸ்பத்திரி கொரோனா சிறப்பு வார்டில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. இந்த வார்டில் மொத்தம் 50 படுக்கைகள் உள்ளன.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த 17 பேருடன் சேர்த்து விருதுநகர் மாவட்டத்தில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 101-ஆக உயர்ந்து இருப்பது குறிப்பிடத்தக்கது. அதே நேரத்தில் குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 40-ஆனது.

Related posts

Leave a Comment