2,317 சிறப்பு ரயில்களில் 31 லட்சம் தொழிலாளர்கள் பயணம்

புதுடில்லி: மாநில அரசுகளின் கோரிக்கையை ஏற்று, மே, 1ம் தேதி முதல் இயக்கப்பட்ட, 2,317 சிறப்பு ரயில்களில், 31 லட்சத்திற்கும் மேற்பட்ட புலம் பெயர் தொழிலாளர்கள், தங்கள் சொந்த ஊர்களை சென்றடைந்துள்ளனர்.

இது குறித்து, ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது: கொரோனா ஊரடங்கால், லட்சக்கணக்கான புலம் பெயர் தொழிலாளர்களின் வாழ்வாதாரம், பாதிக்கப்பட்டுள்ளது. அவர்களை, சொந்த ஊர்களுக்கு அழைத்துச் செல்ல வேண்டும் என, மாநில அரசுகள், ஏப்., மாத பிற்பகுதியில் கோரிக்கை விடுத்த நிலையில், சிறப்பு ரயில்கள் இயக்க முடிவு செய்யப்பட்டது.

மஹாராஷ்டிரா, குஜராத், ராஜஸ்தான், ம.பி., உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து, ஏழு லட்சம் தொழிலாளர்களை, பல்வேறு மாநிலங்களுக்கு அழைத்து செல்ல வேண்டும் என, மேற்கு ரயில்வேக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது. தமிழகம், கேரளா, ஆந்திரா, கர்நாடகா, புதுச்சேரியில் இருந்து, 11.4 லட்சம் தொழிலாளர்களை, வட மாநிலங்களுக்கு அழைத்து செல்ல, தெற்கு ரயில்வேக்கு கோரிக்கை வந்தது.

மத்திய ரயில்வேயிடம், 2.94 லட்சம்; வடக்கு ரயில்வேயிடம், 2.84 லட்சம்; தென் மத்திய ரயில்வேயிடம், 1.86 லட்சம் தொழிலாளர்களை அழைத்து செல்ல கோரிக்கை வந்தது. இதனால், பல்வேறு மாநிலங்களில் இருந்தும், மே, 1 முதல், 2,317 சிறப்பு ரயில்களில், 31 லட்சத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்களை, அவர்களின் சொந்த ஊர்களுக்கு அழைத்து சென்றுள்ளோம்.

தொடக்கத்தில், ரயில்வே மதிப்பீடு, 24 லட்சம் தொழிலாளர்களாக இருந்த நிலையில், ஏழு லட்சம் பேர் அதிகரித்துள்ளனர். மேலும் எவ்வளவு தொழிலாளர்கள் சொந்த ஊர் செல்ல காத்திருக்கின்றனர் என, எங்களிடம் தகவல் இல்லை. ஆனால், அவர்களுக்காக மாநில அரசுகள் கேட்கும் நிலையில், சிறப்பு ரயில்களை இயக்க தயாராக உள்ளோம். சிறப்பு ரயில்களில், சுமார், 12 லட்சம் பேர் உ.பி.,க்கும், ஏழு லட்சத்துக்கும் மேற்பட்டோர் பீஹாருக்கும் அழைத்து செல்லப்பட்டுள்ளனர். இவ்வாறு, அவர்கள் கூறினர்.

Related posts

Leave a Comment