மதுரை, விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரத்தில் 2 மாதங்களுக்கு பிறகு ஆட்டோக்கள் ஓடின

மதுரை, விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரத்தில் 2 மாதங்களுக்கு பிறகு ஆட்டோக்கள் இன்று முதல் ஓடின. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
உலகைப் புரட்டிப்போட்ட கொரோனா மக்களிடம் உயிர் பீதியை மட்டுமல்ல வாழ்க்கை வாழ்வதற்கும் பீதியை ஏற்படுத்தி விட்டது என்பது மிகையல்ல.

கொரோனா காரணமாக பல்வேறு நாடுகளும் ஊரடங்கு பிறப்பித்தது. இதனால் அடித்தட்டு மக்கள் மிகவும் பாதிப்பை சந்தித்தனர். இந்தியாவில் மார்ச் 24-ந் தேதி முதல் ஊரடங்கு அமலில் உள்ளது.

தற்போது 4-வது கட்ட ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் மக்களின் வாழ்வாதாரத்தைக் கருத்தில் கொண்டு பல்வேறு தளர்வுகளும் அறிவிக்கப்பட்டுள்ளன. இதனால் பலர் மகிழ்ச்சியடைந்தனர்.

ஆனால் ஆட்டோக்கள் ஓடவும், சலூன் கடைகள் திறக்கவும் மட்டும் அனுமதி வழங்கப்படாததால் அந்த தொழில்களில் ஈடுபட்டிருந்தவர்கள் மட்டும் சோகத்தில் இருந்து வந்தனர். தாங்களும் தொழில் செய்ய அனுமதிக்க வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்தி வந்தனர்.

இதனை ஏற்று ஆட்டோக்களை சில நிபந்தனைகளுடன் இயக்க அரசு அனுமதி வழங்கியது. இதேபோல் சலூன் கடைகள் திறக்கவும் உத்தரவிடப்பட்டது. இதனால் மகிழ்ச்சியடைந்த தொழிலாளர்கள் அரசுக்கு நன்றி தெரிவித்தனர்.

அரசின் அறிவிப்பைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் இன்று ஆட்டோக்கள் ஓடத் தொடங்கின. ஆட்டோவில் ஓரிரு பயணி மட்டுமே ஏற்றிச் செல்லலாம் என்ற உத்தரவு வேதனை அளித்தாலும் சுமார் 2 மாதங்களுக்கு பிறகு ஆட்டோவை இயக்குவதில் அதன் ஓட்டுனர்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

விருதுநகர் மாவட்டத்தில் சுமார் 2 ஆயிரம் ஆட்டோக்கள் இயங்கத் தொடங்கின. இதனால் காலையிலேயே ஆட்டோ ஸ்டாண்டுகள் களை கட்டத் தொடங்கின.

விருதுநகர் நகர்ப்பகுதியில் 400 ஆட்டோக்கள் ஓடின. பஸ்கள் ஓடாததால், பொதுமக்கள் பலரும் ஆட்டோக்களை பயன்படுத்த தொடங்கினர்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் அரசின் அறிவிப்புக்கு முன்பே, ஒரு சில ஆட்டோக்கள் ஓடிக் கொண்டிருந்தன. தற்போது அரசு அறிவிப்பைத் தொடர்ந்து பல்வேறு பகுதிகளிலும் ஆட்டோக்கள் ஓடின. இதனால் சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட டிரைவர்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

சிவகங்கை மாவட்டத்திலும் இன்று காலை முதல் ஆட்டோக்கள் ஓடத் தொடங்கின. பலரும் ஆர்வத்துடன் இதில் பயணித்தனர்.

மதுரை மாவட்டத்தில் சுமார் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆட்டோக்கள் உள்ளன. இதில் புறநகர் பகுதிகளில் ஒரு சில ஆட்டோக்கள் ஏற்கனவே இயங்கி வந்தன. தற்போது அரசின் உத்தரவைத் தொடர்ந்து நகர்ப் பகுதியிலும் ஆட்டோக்கள் ஓடின.

அதேநேரம் மதுரையைப் பொறுத்தவரை ஷேர் ஆட்டோக்கள் தான் அதிகமாக முன்பு ஓடி வந்தன. இதில் 10 பயணிகள் வரை பயணம் செய்வார்கள். ஆனால் தற்போது ஆட்டோவில் ஒரு பயணி மட்டுமே ஏற்றிச் செல்லப்பட வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளதால், ஷேர் ஆட்டோக்கள் ஓடவில்லை. அந்த ஆட்டோக்கள் இயங்க அனுமதிக்க வேண்டும். ஒரு பயணி மட்டுமே செல்ல வேண்டும் என்ற நிபந்தனையை தளர்த்த வேண்டும் என்று பலரும் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது குறித்து ஆட்டோ டிரைவர்கள் கூறியதாவது:-

கடந்த 60 நாட்களாக எங்கள் தொழில் பாதிப்பால் மிகவும் வறுமையில் உள்ளோம். தற்போது தொழிலை நடத்த அரசு அனுமதி வழங்கினாலும் ஒருவரை மட்டுமே ஏற்ற வேண்டும் என்று நிபந்தனை உள்ளது.

கணவன்-மனைவி, குழந்தைகள் என்று எப்படி தனித்தனி ஆட்டோவில் பயணம் செய்வார்கள். எனவே ஆட்டோ பயணத்தில் 3 பேர் பயணம் செய்ய அனுமதி வழங்கினால் தான் எங்களுக்கு வருமானம் கிடைக்கும். இல்லாவிட்டால் ஆட்டோ இயங்கினாலும் எந்த பயனும் எங்களுக்கு கிடைக்காது. எனவே அரசு 3 நபர் பயணம் செய்ய அனுமதி தர வேண்டும். பயணிகளுக்கு சானிடைசர் உள்ளிட்ட முன்னெச்சரிக்கை தடுப்பு மருந்துகளையும் அரசு நிர்வாகம் ஆட்டோ டிரைவர்களுக்கு தந்து உதவ வேண்டும்.

Related posts

Leave a Comment