விருதுநகர் மாவட்டத்தில் பாதிப்பு 100-ஐ கடந்தது

25-05-2020

விருதுநகர் மாவட்டத்தில் பாதிப்பு 100-ஐ கடந்தது

விருதுநகர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் 12 பேருக்கு கொரோனா உறுதியானது. இந்த நிலையில் நேற்று மேலும் 17 பேருக்கு பாதிப்பு உறுதியாகி உள்ளது.

அதாவது, விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த தொழிலாளர்கள் 200-க்கும் மேற்பட்டவர்கள் டெல்லியில் பல்வேறு இடங்களில் தங்கி கூலித்தொழிலாளர்களாக வேலை செய்து வந்தனர். தற்போதைய ஊரடங்கால் கடந்த 2 மாதமாக அங்கேயே முடங்கி கிடந்தனர். தற்போது அவர்கள் சிறப்பு ரெயில் மூலம் சொந்த ஊர் திரும்பினர். இதில் விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த 158 ஆண்கள், 12 பெண்கள், 2 குழந்தைகள் என மொத்தம் 172 பேர் ஆமத்தூர் அருகில் உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் தனிமைப்படுத்தப்பட்டு இருந்தனர்.

இவர்களுக்கு கொரோனா தொற்று இருக்கிறதா? என்பதை கண்டறிய மருத்துவ பரிசோதனை நடந்தது. இவர்களில் 60 பேருக்கான பரிசோதனை முடிவுகள் நேற்று அறிவிக்கப்பட்டன. அதில் 17 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர்களை சிவகாசியில் உள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக சுகாதாரத்துறையினரும், மாவட்ட நிர்வாகமும் அனுப்பி வைத்தது. அதன்பேரில் அவர்கள் அங்கு கொரோனா சிறப்பு வார்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இது குறித்து சிவகாசி அரசு ஆஸ்பத்திரியின் தலைமை டாக்டர் அய்யனார் கூறியதாவது:-

வெளிமாநிலங்களில் இருந்து விருதுநகர் மாவட்டம் திரும்பியவர்களில் 17 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களுக்கு சிவகாசி அரசு ஆஸ்பத்திரி கொரோனா சிறப்பு வார்டில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. இந்த வார்டில் மொத்தம் 50 படுக்கைகள் உள்ளன.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த 17 பேருடன் சேர்த்து விருதுநகர் மாவட்டத்தில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 101-ஆக உயர்ந்து இருப்பது குறிப்பிடத்தக்கது. அதே நேரத்தில் குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 40-ஆனது.

Related posts

Leave a Comment