கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க கூடுதலாக டாக்டர்கள் நியமனம் – அமைச்சர் விஜயபாஸ்கர்

கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க சென்னைக்கு கூடுதலாக 675 டாக்டர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

அமைச்சர் விஜயபாஸ்கர்

சென்னை:

தமிழ்நாட்டில் சென்னையில் தான் கொரோனா வைரஸ் மிக அதிகமாக பரவியுள்ளது. இதுவரை சென்னையில் மட்டும் 11,640 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் 127 பேர் கொரோனாவுக்கு மரணம் அடைந்துள்ளனர். இதில் சென்னையில் மட்டும் 91 பேர் இறந்துள்ளனர். கொரோனா பரவுவது தொடர்ந்து அதிகரித்து வருவதால் இதை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ஆனாலும் தொடர்ந்து கொரோனா வேகமாக பரவிக் கொண்டு தான் உள்ளது.

கொரோனா நோய் தொற்றை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை அடுத்த கட்ட நகர்வுக்கு எடுத்துச் செல்லும் நோக்கத்துடன் மருத்துவ நிபுணர்களுடன் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி 4-வது முறையாக நேற்று ஆலோசனை மேற் கொண்டார். அப்போது மருத்துவ நிபுணர்கள் முதல்- அமைச்சரியம் கூறுகையில்,

‘சென்னையில் கொரோனா நோய் தொற்றை கட்டுப்படுத்த நோய் தொற்று பாதிக்கப்பட்டவர்களை தனிமைப்படுத்தி சிகிச்சை மேற்கொண்டால் கொரோனாவின் தாக்கம் மற்றவர்களுக்கு பரவாமல் தடுக்கப்படும் என்று கருத்து தெரிவித்தனர்’.

மேலும் வயதானவர்கள் நோய் தொற்றுக்கு சீக்கிரம் ஆளாகக்கூடியவர்களுக்கு கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்றும் அரசுக்கு யோசனை தெரிவித்தனர். எந்த சூழ்நிலையிலும் கொரோனா பரிசோதனை எண்ணிக்கையை குறைக்க கூடாது என்றும் மருத்துவக் குழுவினர் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் வலியுறுத்தி கூறினார்கள்.

மருத்துவ நிபுணர் குழுவினரின் பரிந்துரைகளை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஏற்றுக்கொண்டார். இது தொடர்பாக பல்வேறு உத்தரவுகளையும் பிறப்பித்து வருகிறார்.

சென்னையில் கொரோனா பரவுவதை கட்டுப்படுத்த வெளி மாவட்டங்களில் இருந்தும் சுகாதார பணியாளர்களை சென்னைக்கு பணியமர்த்த நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார். இதுதவிர கூடுதல் டாக்டர்களை சென்னைக்கு நியமிக்கவும் ஆணை பிறப்பித்துள்ளார்.

இதுகுறித்து சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மாலைமலர் நிருபரிடம் கூறியதாவது:-

கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்துவதற்காக சுகாதாரப் பணியாளர்கள் தீவிரமாக பணியாற்றி வருகிறார்கள். தமிழ்நாட்டில் பல மாவட்டங்களில் கொரோனா பரவுவது முற்றிலும் நின்றுவிட்டது.

கொரோனா இல்லாத மாவட்டங்களில் உள்ள சுகாதார ஆய்வாளர்கள் சென்னையில் பணியாற்ற உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்படி மற்ற மாநகராட்சி, நகராட்சிகளில் உள்ள 10-க்கும் மேற்பட்ட சுகாதார ஆய்வாளர்கள் சென்னைக்கு வந்துள்ளனர்.

தற்போது சென்னைக்கு புதியதாக 675 டாக்டர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். எம்.பி.பி.எஸ் படித்த இவர்களுக்கு 40 ஆயிரம் ரூபாய் சம்பளம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இவர்களும் உடனடியாக பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

Related posts

Leave a Comment