திமுக-காங்கிரஸ் அரசு தொடங்கி வைத்த சமூக அநீதியை… பாஜக அரசும் தொடர்கிறது -டிடிவி தினகரன்

சென்னை: மருத்துவப் படிப்புகளுக்கான அனைத்திந்திய ஒதுக்கீட்டில் திமுக-காங்கிரஸ் அரசு தொடங்கி வைத்த சமூக அநீதியை, பாஜக அரசும் தொடர்வதாக அமமுக பொதுச்செயலாளர் தினகரன் விமர்சித்துள்ளார்.

தவறைச் சரி செய்து இதர பிற்படுத்தப்பட்டோருக்கு (O.B.C) உரிய இட ஒதுக்கீடு வழங்குவதை உறுதிசெய்திட வேண்டுமென மத்திய அரசை வலியுறுத்துவதாக அவர் தெரிவித்துள்ளார்.

2007 முதல்

2007 ஆம் ஆண்டில் இருந்து அகில இந்திய அளவிலான மருத்துவ இடங்களில் ஓ.பி.சி மாணவர்களுக்கு அளிக்கப்பட்டிருக்க வேண்டிய 27% இட ஒதுக்கீடு வழங்கப்படவில்லை. தி.மு.க இடம்பெற்ற காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு தொடங்கிவைத்த இந்த சமூகஅநீதி இன்று வரை தொடர்வது தற்போது தெரியவந்திருக்கிறது.

நியாயம் தேவை இதனை உடனடியாக சரி செய்து இதர பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு கிடைக்கச் செய்வதுதானே தற்போதைய மத்திய அரசின் சரியான செயல்பாடாக இருக்க முடியும்? அதைவிட்டுவிட்டு, தி.மு.க – காங்கிரஸ் கூட்டணி ஆரம்பித்து வைத்தப்பிழையைப் பா.ஜ.கவும் தொடர்வது தவறல்லவா?! பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர் வகுப்பினருக்கு 10% இட ஒதுக்கீடு வழங்குவதில் காட்டும் ஆர்வத்தை, நாட்டின் மக்கள் தொகையில் பாதிக்கும் மேற்பட்டோராக இருக்கும் இதர பிற்படுத்தப்பட்டோருக்கு நியாயம் வழங்குவதிலும் மத்திய அரசு காட்டுவது அவசியமல்லவா?!

உறுதியாக நிற்க வேண்டும் எனவே, மருத்துவம் தொடர்பான அனைத்துவகை படிப்புகளிலும் மத்திய தொகுப்புக்கு மாநில அரசுகள் அளிக்கும் இடங்களில் எந்தச் சிக்கலுமின்றி இதர பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு 27% இடங்களை ஒதுக்கிட வேண்டும். தமிழ்நாட்டைப் பொறுத்தமட்டில் ‘சமூக நீதி காத்த வீராங்கனை’ அம்மா அவர்கள் உருவாக்கி, கட்டி காப்பாற்றித் தந்திருக்கிற 69% இட ஒதுக்கீட்டின்படி, தமிழகம் வழங்குகிற அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களிலும் இதர பிற்படுத்தப்பட்டோருக்கு 50% இட ஒதுக்கீடு வழங்கப்படவேண்டும் என்பதில் அரசு உறுதியாக இருக்க வேண்டும்.

Related posts

Leave a Comment