ஒத்திவைக்கப்பட்ட 18 இடங்களுக்கான ராஜ்யசபா தேர்தல் ஜூன் 19-ல் நடைபெறும்- சிந்தியா நிம்மதி!

டெல்லி: கொரோனா பரவலால் ஒத்திவைக்கப்பட்டிருந்த 18 இடங்களுக்கான ராஜ்யசபா தேர்தல் ஜூன் 19-ந் தேதி நடைபெறும் என்று தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. ஆந்திரா, குஜராத் மாநிலங்களில் 4 இடங்கள், மத்திய பிரதேசம், ராஜஸ்தானில் 3 இடங்கள், ஜார்க்கண்ட்டில் 2, மணிப்பூர் மற்றும் மேகாலயாவில் தலா ஒரு ராஜ்யசபா இடத்துக்கான தேர்தல் மார்ச் 26-ந் தேதி நடைபெற இருந்தது. ஆனால் கொரோனா பரவலால் அனைத்து தேர்தல் நடவடிக்கைகளையும் தலைமை தேர்தல் ஆணையம் ஒத்தி வைத்தது.

தற்போது 5-வது கொரோனா லாக்டவுன் அமலில் இருந்தாலும் பெரும்பாலான கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டிருக்கின்றன. இதனால் நாடு முழுவதும் இயல்பு நிலை திரும்ப தொடங்கியிருக்கிறது. இதனையடுத்து ஒத்திவைக்கப்பட்ட ராஜ்யசபா தேர்தல் ஜூன் 19-ந் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்திருக்கிறது. வரும் 19-ந் தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை ராஜ்யசபா தேர்தல் நடைபெறும்; தேவைப்பட்டால் வாக்குகள் எண்ணும் பணி அன்று மாலை 5 மணியே தொடங்கும் என்றும் தேர்தல் ஆணையம் தெரிவித்திருக்கிறது. 18 ராஜ்யசபா இடங்களுக்கான தேர்தல் நடவடிக்கைகள்

அனைத்தும் ஜூன் 22-ந் தேதிக்குள் நிறைவடையும் என்றும் கூறியுள்ளது தேர்தல் ஆணையம். மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் மூத்த தலைவராக இருந்த ஜோதிராதித்யா சிந்தியா, திடீரென பாஜக கட்சிக்கு தாவினார். அவரது ஆதரவு காங்கிரஸ் எம்.எல்.ஏக்களும் பதவியை ராஜினாமா செய்ததால் மத்திய பிரதேசத்தில் முதல்வர் கமல்நாத் தலைமையிலான அரசு கவிழ்ந்தது. பாஜகவின் சிவராஜ்சிங் சவுகான் மீண்டும் மத்திய பிரதேச முதல்வரானார். அப்போது ஜோதிராதித்யா சிந்தியாவை ராஜ்யசபா வேட்பாளராக அறிவித்தது பாஜக. சிந்தியாவும் வேட்புமனுத் தாக்கல் செய்தார். ராஜ்யசபா எம்.பி.யாகும் சிந்தியாவுக்கு காங்கிரஸ் அரசை கவிழ்த்ததற்கு பரிசாக மத்திய அமைச்சர் பதவி வழங்கப்பட இருக்கிறது. இந்த நிலையில் தேர்தல் ஒத்துவைக்கப்பட்டது அவருக்கும் அவரது ஆதரவாளர்களுக்கும் ஏமாற்றமாக இருந்தது. தற்போதைய தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பு சிந்தியா முகாமை மகிழ்ச்சி

அடைய வைத்துள்ளது.

Related posts

Leave a Comment