பார்லி., மழைக்கால கூட்டத்தொடர்: வெங்கையா, ஓம் பிர்லா ஆலோசனை

புதுடில்லி : பார்லி.,யின் மழைக்கால கூட்டத்தொடர் குறித்து, ராஜ்யசபா தலைவர் வெங்கையா நாயுடு, லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லா ஆகியோர், நேற்று ஆலோசனை நடத்தினர்.
ஆண்டுதோறும், பார்லி.,யின் மழைக்கால கூட்டத்தொடர், ஜூலை மற்றும் ஆக., மாதங்களில் நடைபெறுவது வழக்கம்.இந்த ஆண்டு, கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு நடுவே, மழைக்கால கூட்டத்தொடர்களை பாதுகாப்பாக நடத்துவது குறித்து, ராஜ்யசபா
தலைவர் வெங்கையா நாயுடு மற்றும் லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லா ஆகியோர், நேற்று ஆலோசனை நடத்தினர்.ராஜ்யசபா தலைவரின் இல்லத்தில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், இரு சபைகளின் பொதுச் செயலர்களும் பங்கேற்றனர்.

கூட்டம் குறித்து, அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டதாவது:இது போன்ற இக்கட்டான சூழ்நிலையில், வழக்கமான முறையில் கூட்டத்தொடர்களை நடத்த முடியாமல் போனால், தொழில்நுட்ப அடிப்படையில், புதிய வழிமுறைகளை மேற்கொள்வது குறித்து ஆலோசிக்கப்பட்டது.லோக்சபா கூட்டத்தை மைய மண்டபத்திலும், குறைவான உறுப்பினர்கள் கொண்ட ராஜ்யசபா கூட்டத்தை, லோக்சபா அரங்கிற்கும் மாற்றம் செய்வது உள்ளிட்ட, பல்வேறு விஷயங்கள் குறித்து பரிசீலிக்கப்பட்டது. இரு சபைகளையும், மாற்று நாட்களில் நடத்துவது குறித்தும், ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.
மழைக்கால கூட்டத் தொடரில் பங்கேற்போர், சமூக விலகலை பின்பற்றுவது மற்றும் பார்லி.,யின் மைய மண்டபத்தை சரியான முறையில் பயன்படுத்துவதற்கான வழிமுறைகள் குறித்து ஆய்வு செய்யும்படி, பொதுச்செயலர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு, லோக் சபா மற்றும் ராஜ்யசபா தலைவர்கள் அறிவுறுத்தினர்.அத்துடன், பார்லி., கூட்டத்தை, ‘ஆன்லைன்’ வாயிலாக, நீண்ட நாட்கள் நடத்துவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. கொரோனா வைரஸ் அச்சுறுத்தலுக்கு நடுவே, மார்ச், 23ல் பார்லி., கூட்டத்தொடர் ஒத்தி வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Related posts

Leave a Comment