சென்னையில் கட்டுக்குள் வராத கொரோனா… 2 மாதங்களில் 3 முறை ஆளுநரை சந்தித்த முதலமைச்சர்

சென்னை: ஆளுநர் பன்வாரி லால் புரோஹித்தை சந்தித்து பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தமிழகத்தில் எடுக்கப்பட்டுள்ள கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் ஊரடங்கு தளர்வு குறித்து விளக்கினார். சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் இந்தச் சந்திப்பு நடைபெற்றது. முதலமைச்சருடன் ஆளுநரை சந்திப்பதற்காக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ், டிஜிபி திரிபாதி உள்ளிட்டோரும் உடன் சென்றிருந்தனர். கொரோனா வைரஸின் தாக்கம் மற்றும் அரசு மருத்துவமனைகளில் அளிக்கப்பட்டு வரும் சிகிச்சைகள் குறித்த விவரம் ஆளுநருக்கு தெரிவிக்கப்பட்டது.

மேலும், தற்போது 5-ம் கட்ட ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் அதில் அரசு அறிவித்துள்ள தளர்வுகள் பற்றியும் விரிவாக ஆளுநரிடம் எடுத்துரைக்கப்பட்டது. இதனிடையே சென்னையில் கொரோனாவை கட்டுக்குள் கொண்டு வருவது பற்றியும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் முழுமையாக இன்னும் குறையவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் கொரோனா பரிசோதனை எண்ணிக்கைகள் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் முன்வைத்த புகார்கள் பற்றியும் முதலமைச்சரிடம் ஆளுநர் கேட்டறிந்ததாக கூறப்படுகிறது.

மேலும், ஊரடங்கு தளர்வு அறிவிக்கப்பட்ட இடங்களில் மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பற்றியும் ஆளுநருக்கு எடுத்துக்கூறப்பட்டுள்ளது. இதனிடையே ஊரடங்கு அமலில் உள்ள 2 மாதங்களில் 3-வது முறையாக ஆளுநர் பன்வாரிலாலை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சந்திப்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

Leave a Comment