சென்னையில் கொரோனா தடுப்புமுதல்வர் இன்று ஆலோசனை

சென்னை : சென்னையில், கொரோனா நோய் பரவலை தடுக்க, எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து, முதல்வர் இ.பி.எஸ்., இன்று அதிகாரிகளுடன், ஆலோசனை நடத்த உள்ளார்.

சென்னையில், நோய் பரவல் தினமும் அதிகரித்தபடி உள்ளது. நோயை கட்டுப்படுத்த, மண்டல வாரியாக, ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் தலைமையில், குழு அமைக்கப்பட்டது.நோய் தொற்று ஏற்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களை கண்டறிந்து, அவர்களுக்கு சிகிச்சை அளிக்க, தனி குழுக்கள் அமைக்கப்பட்டன.ஆனால், அரசு அமைத்த குழுவில் இடம்பெற்ற அதிகாரிகள், சுகாதார குழுவினர், மாநகராட்சி அலுவலர்கள் இடையே, ஒருங்கிணைப்பு இல்லை; முறையான திட்டமிடலும் இல்லை.

இதனால், நோய் பரவலை கட்டுப்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அரசு மருத்துவ மனைகள் அனைத்தும் நிரம்பி வழிகின்றன. நோய் பரவல் காரணமாக, கொரோனா சிகிச்சை தொடர்பாக, அரசு பிறப்பித்த வழிகாட்டு நெறிமுறைகளை, பின்பற்ற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.அனைத்து துறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து, போர்க்கால அடிப்படையில், முறையான திட்டம் வகுத்து, நோய் கட்டுப்பாட்டு பகுதியை கட்டுக்குள் கொண்டு வந்து, அங்குள்ளோருக்கு உரிய சிகிச்சை அளித்தால் மட்டுமே, நோயை கட்டுப்படுத்த முடியும்.

சென்னையில் நோய் பரவல், எப்போது கட்டுக்குள் வரும் என்ற எதிர்பார்ப்பில், அனைத்து மாவட்ட மக்களும் உள்ளனர்.இந்நிலையில், சென்னையில், நோய் பரவலை தடுப்பது குறித்து, அதிகாரிகளுடன், முதல்வர் இ.பி.எஸ்., இன்று ஆலோசனை நடத்த உள்ளார். அமைச்சர் விஜயபாஸ்கர், தலைமைச் செயலர் சண்முகம், சுகாதாரத்துறை செயலர் பியூலா ராஜேஷ், சென்னை சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன், மாநகராட்சி கமிஷனர் பிரகாஷ் பங்கேற்க உள்ளனர்.

Related posts

Leave a Comment