கொரோனா எதிரியை நம் மருத்துவர்கள் வீழ்த்துவர்

புதுடில்லி : ”கண்ணுக்கு தெரியாத கொரோனா வைரஸ் என்ற எதிரியை, போர் வீரர்களாகிய நம் மருத்துவர்கள் நிச்சயம் வீழ்த்துவர். மருத்துவர்கள், சுகாதார பணியாளர்களுக்கு எதிரான வன்முறை சம்பவங்களை, ஒருபோதும் ஏற்க முடியாது,” என, பிரதமர் மோடி பேசினார். கர்நாடக மாநிலம், பெங்களூரில் உள்ள ராஜிவ் காந்தி மருத்துவ பல்கலையில் வெள்ளி விழா நிகழ்ச்சியின், ‘வீடியோ கான்பரன்ஸ்’ வாயிலாக பங்கேற்று, பிரதமர் மோடி உரையாற்றியதாவது:

வளர்ச்சி அடைந்த நாடுஇரண்டாம் உலகப் போருக்குப் பின், சர்வதேச நாடுகள், மாபெரும் நெருக்கடி நிலையை இப்போது சந்திக்கின்றன. உலகப் போர் முடிந்ததும், போருக்கு முன், போருக்குப் பின் என, எப்படி உலகம் பல பிரச்னைகளை சந்தித்ததோ, அதுபோல், கொரோனாவுக்குப் பின்னும், பிரச்னைகளை சந்திக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.ஆனால், போரை விட, நாம் இப்போது சந்திக்கும் பிரச்னை மிகவும் வித்தியாசமானது. இது, கண்ணுக்கு தெரியாத போர். போர் உடை அணியாத வீரர்களாக, நம் மருத்துவர்களும், நர்சுகளும், சுகாதார பணியாளர்களும் திகழ்கின்றனர்.

இவர்கள் நிச்சயமாக கொரோனாவுக்கு எதிரான போரில் வெல்வர். டாக்டர், நர்ஸ் மற்றும் விஞ்ஞானிகளை, இந்த உலகமே நம்பிக்கையுடனும், நன்றியுடனும் பார்க்கிறது. உலக மக்களின் உடல் நலனை நீங்கள் காப்பீர்கள் என அனைவரும் எதிர்பார்க்கின்றனர். இதற்கு முன், பொருளாதாரம் சார்ந்த துறைகளுக்கு தான், உலக நாடுகள் முக்கியத்துவம் அளித்தன.இனி, இதில் மாற்றம் தேவை. சர்வதேச வளர்ச்சி என்பது, மனித நேயத்தை அடிப்படையாக கொண்டதாக இருக்க வேண்டும். வளர்ச்சி அடைந்த நாடுகள் எல்லாம், இதற்கு முன் இல்லாத வகையில் சுகாதாரத் துறைக்கு முக்கியத்துவம் அளிக்கப் போவதை, இனி பார்க்கத் தான் போகிறோம். சுகாதாரத் துறையில், மூன்று முக்கியமான விஷயங்களை பற்றித் தான், இனி அதிகம் விவாதிக்க வேண்டும்.

தகவல் தொழில்நுட்பம்முதலாவதாக, ‘டெலிமெடிசின்’ துறையில், புதிய கண்டுபிடிப்புகளை கையாள்வது பற்றி விவாதிக்க வேண்டும். அடுத்தது, சுகாதாரத்துறையில், இந்தியாவில் தயாரிக்கப்பட்ட பொருட்கள், உபகரணங்களை அதிகம் பயன்படுத்துவது குறித்து பேசப்பட வேண்டும்.மூன்றாவதாக, சுகாதாரத் துறையில் தகவல் தொழில்நுட்பங்களை பயன்படுத்துவதற்கான வாய்ப்பு குறித்து பேச வேண்டும். கொரோனா தடுப்பு பணிகளில் போர் வீரர்களாக செயல்படும் டாக்டர்கள், சுகாதார பணியாளர்களுக்கான பாதுகாப்பு உடைகளை தயாரிப்பதில், உள்நாட்டு நிறுவனங்கள் ஆர்வம் காட்டி வருகின்றன. அதிக அளவில் பாதுகாப்பு உடைகளை தயாரித்து வருகின்றன.

மேலும், உள் நாட்டில் தயாரிக்கப்பட்ட, ‘என் 95’ முக கவசம், அனைத்து மாநிலங்களுக்கும், ‘சப்ளை’ செய்யப்பட்டுள்ளன. இதுவரை, 1.2 கோடி முக கவசங்கள் சப்ளை செய்யப்பட்டுள்ளன. கொரோனா கண்காணிப்பு பணிகளுக்கு, ‘ஆரோக்ய சேது’ செயலி, மிகவும் பயனுள்ளதாக உள்ளது. இதுவரை, 12 கோடி பேர், இதை பதிவிறக்கம் செய்து, பயனடைந்துள்ளனர். நாட்டின் சில பகுதிகளில், கொரோனா தடுப்பு பணிகளில் ஈடுபட்டுள்ள டாக்டர், நர்ஸ் மற்றும் சுகாதார பணியாளர்களுக்கு எதிராக வன்முறை சம்பவங்கள் நடந்துள்ளன; இது போன்ற செயல்களை ஒருபோதும் அனுமதிக்க முடியாது. இது போன்ற வன்முறையில் ஈடுபடுவோர் மீது, மாநில அரசுகள் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நடவடிக்கைகடந்த ஆறு ஆண்டுகளில், சுகாதார துறையில், பல்வேறு நடவடிக்கைகளை, முயற்சிகளை மத்திய அரசு மேற்கொண்டு உள்ளது. உடல் நலத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்வது, முதல் முயற்சி. யோகா, ஆயுர்வேதா போன்றவை இதில் அடக்கம். அடுத்தது, மருத்துவ சிகிச்சைக்கான வசதிகளை ஏற்படுத்தியது; இதற்காகவே, ஆயுஷ்மான் பாரத் காப்பீட்டு திட்டம் செயல்படுத்தப்பட்டது; இது, உலகின் மிகப் பெரிய சுகாதார காப்பீட்டு திட்டம். இது துவங்கிய இரண்டு ஆண்டுகளில், ஒரு கோடி பேர் பயன்அடைந்துள்ளனர்.மூன்றாவது, மருத்துவ கட்டமைப்பு மற்றும் மருத்துவக் கல்விக்கான வசதிகளை மேம்படுத்துவது.

நாடு முழுதும், 22க்கும் அதிகமான எய்ம்ஸ் மருத்துவமனைகளை அமைப்பதற்கான நடவடிக்கை துவங்கியுள்ளது. ஒவ்வொரு மாவட்டத்திலும் மருத்துவக் கல்லுாரிகள் துவங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. நான்காவதாக, மருத்துவ கல்லுாரிகளில் இளநிலை மற்றும் முதுநிலை படிப்புகளுக்கான இடங்களும், கடந்த நான்கு ஆண்டுகளில் கணிசமாக அதிகரிக்கப்பட்டுள்ளன. ஐந்தாவதாக மருத்துவக் கல்வியை விரிவுபடுத்துவதற்கும், சுகாதாரத் துறையை மேம்படுத்துவதற்குமான திட்டங்களை நடைமுறைப்படுத்தும் சட்டங்களும் நிறைவேற்றப்பட உள்ளன. இவ்வாறு, அவர்

பேசினார்.

Related posts

Leave a Comment