சூறைக்காற்றால் வாழைகள் சேதம்

விருதுநகர்:விருதுநகரில் தொடரும் சூறைக்காற்றால் வாழைகள் சேதமடைந்து விவசாயிகளை வேதனையடைய செய்துள்ளது.

மாவட்டத்தில் 942 எக்டேர் பரப்பில் கிணற்று பாசனத்தில் வாழை பயிரிடப்பட்டுள்ளது. மானாவாரி பயிரான மக்காசோளம், பருத்திக்கு அடுத்து வாழை தான் பிரதான விவசாயம். இங்கு மே 28 முதல் தொடர்ந்து சூறைக்காற்று வீசி வருவதால் 11.78 எக்டேரில் வாழைகள் சேதமடைந்து விவசாயிகளை வேதனையில் ஆழ்த்தியுள்ளது.

விவசாயி சண்முகசுந்தரம் கூறியதாவது: மெட்டுக்குண்டில் 3 ஏக்கரில் 1,500 மரங்கள் பயிரிட்டேன். 2019 ஜூனில் நடவு செய்ததால் தற்போது குலை தள்ளும் நிலையில் வாழை மரங்கள் செழிப்பாக இருந்தன. சூறைக்காற்றால் 600க்கும் மேற்பட்ட வாழைகள் சேதமடைந்து உள்ளன. இழப்பீடு வழங்க வேண்டும் என்றார்.

தோட்டக்கலைத்துறை துணை இயக்குனர் ஷீலா ஜான் கூறுகையில், விருதுநகரில் சூறைக் காற்றால் 53 வாழை விவசாயிகள் பாதிப்படைந்துள்ளனர். மாநில பேரிடர் மேலாண்மை நிதியின் கீழ் நஷ்ட ஈடு பெற ரூ. ஒரு லட்சத்து 58 ஆயிரத்து 476 வழங்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது என்றார்.

Related posts

Leave a Comment