கருணாநிதியின் 97-வது பிறந்தநாள்… # FATHER OF MODERN TAMILNADU… டிரெண்ட் செய்யும் திமுகவினர்

சென்னை: மறைந்த முன்னாள் திமுக தலைவர் கருணாநிதியின் பிறந்தநாளையொட்டி #FATHER OF MODERN TAMILNADU (நவீன தமிழகத்தின் தந்தை) என்ற ஹேஷ்டேக்கை டிரெண்ட் செய்யத் தொடங்கியுள்ளது திமுக ஐ.டி.விங். நாளை தான் கருணாநிதியின் பிறந்தநாள் என்றாலும் கூட, இன்று முதலே சமூக வலைதளங்கள் வாயிலாக திமுகவினர் அவருக்கு புகழஞ்சலி செலுத்துகின்றனர். மேலும், திமுக ஆட்சிக்காலத்தில் கருணாநிதியால் கொண்டு வரப்பட்ட திட்டங்களையும், அவரது பணிகளையும் பட்டியலிட்டுள்ளது அக்கட்சியின் தகவல் தொழில்நுட்ப பிரிவு.

ஆடம்பரம் வேண்டாம் கருணாநிதி பிறந்தநாளான ஜூன் 3-ம் தேதியை பொறுத்தவரை திமுகவினர் ஒவ்வொருவரும் திருவிழாவை போல் கொண்டாடி மகிழ்வார்கள். அவர் உயிருடன் இருந்தவரை அவரை சந்தித்து வாழ்த்துப்பெறுவதற்காக வெளியூர் கட்சிக்காரர்கள் சென்னையில் குவிவார்கள். ஜூன் 1-ம் தேதி மாலை முதல் பிறந்தநாள் கொண்டாட்டங்கள் களை கட்டிவிடும். பாட்டரங்கம், கருத்தரங்கம், பொதுக்கூட்டம் என சேகர்பாபு, மா.சுப்பிரமணியன், ஜெ.அன்பழகன் ஆகியோர் தடபுடல் ஏற்பாடுகளை செய்துவிடுவார்கள்.

ஆடம்பர நிகழ்வுகள் இந்நிலையில் கருணாநிதி மறைந்து சுமார் 2 ஆண்டுகள் ஆகவுள்ள நிலையில் அவரது 97-வது பிறந்தநாள் நாளை வருகிறது. வழக்கமாக நடைபெறும் கருணாநிதி பிறந்தநாள் பொதுக்கூட்டம் கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக இந்தாண்டு தவிர்க்கப்பட்டுள்ளது. அதேபோல் இந்தாண்டு ஆடம்பர நிகழ்வுகள் நடத்திட வேண்டாம் என்றும், ஏழை எளியோருக்கு நலத்திட்ட உதவிகளை மட்டும் செய்யுமாறும் திமுக தலைவர் ஸ்டாலினும் கட்சியினருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

நவீன தமிழகத்தின் தந்தை இதனிடையே திமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு மற்றும் இளைஞரணி சார்பில் #FATHER OF MODERN TAMILNADU (நவீன தமிழகத்தின் தந்தை) என்ற ஹேஷ்டேக்கை டிரெண்ட் செய்யத் தொடங்கியுள்ளார்கள். நாட்டிலேயே முதல்முறையாக விவசாயத்திற்கு இலவச மின்சாரம், டைடல் பார்க் நிறுவனங்களை தொடங்கியது, ஆசியாவிலேயே முதல் முறையாக கால்நடை பல்கலைக்கழகம் அமைத்தது, சிட்கோ, சிப்காட், அமைத்தது என ஏராளமான பட்டியலை கருணாநிதியின் சாதனைகளாக பட்டியலிட்டு சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளது திமுக ஐடி விங்.

Related posts

Leave a Comment