கலைஞரும் சினிமாவும்.. ராஜகுமாரி முதல் பொன்னர் சங்கர் வரை.. கருணாநிதி பேனா தீட்டிய காவியங்கள்!

சென்னை: கலைஞர், முத்தமிழ் அறிஞர், தமிழ்நாட்டின் முதல்வர் என பல பெருமைகளுக்கு சொந்தக்காரரான முத்துவேல் கருணாநிதியின் 97வது பிறந்தநாள் இன்று அனுசரிக்கப்படுகிறது.

அரசியல்வாதியாக ஆவதற்கு முன்பே கலைஞரானவர். நாடகம், சினிமா என கலைத்துறைக்கு கருணாநிதி ஆற்றிய பணி அளப்பரியது.

எம்.ஜி.ஆர்., சிவாஜி எனும் இரு திரை ஜாம்பவான்கள் இவர் எழுத்தில் பல படங்களில் பணியாற்றியுள்ளார்கள்.

முதல்வர் ஆன பிறகும், கடந்த 2011ம் ஆண்டு வரை சினிமாவிலும் தனது பங்கை ஆற்றிய மாபெரும் கலைஞனின் சினிமா வாழ்க்கை பற்றி இங்கே காண்போம்.

முதல் படம்

1947ம் ஆண்டு வெளியான ராஜகுமாரி படம் தான் கருணாநிதியின் பேனா மையின் தீரத்தை இந்த தமிழ் சினிமா கண்டு வியக்க ஆரம்பமாக இருந்தது. ஜூப்பிடர் பிக்சர்ஸ் தயாரிப்பில் ஏ.எஸ்.ஏ. சாமி இயக்கத்தில் எம்.ஜி.ஆர், நம்பியார் உள்ளிட்ட பல பிரபலங்கள் நடிப்பில் வெளியான ராஜகுமாரி படத்திற்கு வசனகர்த்தாவாக கருணாநிதி தனது 20வது வயதில் தமிழ் சினிமாவில் காலடி எடுத்து வைத்தார்.

பராசக்தியும் பகுத்தறிவும்

ராஜகுமாரி படத்திற்கு பிறகு, பல படங்களுக்கு வசனம் எழுதவும், திரைக்கதை எழுதவும் கருணாநிதிக்கு வாய்ப்புகள் குவிந்தன. பகுத்தறிவு பகலவனாக இருந்த கருணாநிதி சிவாஜியின் அறிமுக படமான பராசக்தி படத்திற்கு ஒப்பந்தம் செய்யப்பட்ட நிலையில், தீத்தெறிக்கும் வசனங்களையும், பகுத்தறிவு ஜோதியையும் தெளிவாக பற்றவைத்தார்.

மறக்க முடியாத மனோகரா

எல்.வி. பிரசாத் இயக்கத்தில் 1954ம் ஆண்டு சிவாஜி கணேசன் நடிப்பில் வெளியான மனோகரா படத்தை தமிழ் சினிமா உள்ளவரை யாராலும் மறக்க முடியாது. பம்மல் சம்பந்த முதலியாரின் கதைக்கு திரைக்கதை மற்றும் அனல் பறக்கும் வசனங்களை எழுதி இந்திய சினிமாவையே திரும்பி பார்க்க வைத்தார் கருணாநிதி. ” அரசன் உத்திரவென்ன? ஆண்டவனின் உத்திரவுக்கே காரணம் கேட்க ஆரம்பித்து விட்டார்கள். அரசே! சிறைச்சாலைக்குச் செல்ல வேண்டும் தாய் என்று கேள்விப்பட்ட பின்னும் அடங்கிக் கிடப்பவன் ஆமை!” என்பதெல்லாம் பொறுத்தது போதும் பொங்கி எழு மனோகராவுக்கும் ஒருபடி மேல்.

கலைஞரின் கண்ணகி

ஐம்பெரும் காப்பியங்களில் ஒன்றான சிலப்பதிகாரத்தை பூம்புகார் என்ற பெயரில் இயக்குநர் நீலகண்டன் 1964ம் ஆண்டு இயக்கினார். மதுரையை எரித்த கண்ணகி மற்றும் கோவலனின் கதைக்கு கருணாநிதி எழுதிய வசனங்கள் ஒவ்வொன்றும், மக்கள் மனங்களில் பசுமரத்து ஆணிபோல ஆழமாக பதிந்தது. கருணாநிதியின் வசனத்தில் ரியல் கண்ணகியாகவே சி.ஆர். விஜயகுமாரி ருத்ர தாண்டவம் ஆடியிருப்பார்.

பொன்னர் சங்கர் ராஜகுமாரியில் தொடங்கிய கருணாநிதியின் திரை பயணம் தமிழ்நாட்டின் முதல்வராகவும், திராவிட முன்னேற்ற கட்சியின் தலைவராகவும் மாறிய பின்னரும் நீண்டு கொண்டே சென்றது. பாச கிளிகள், உளியின் ஓசை, பெண் சிங்கம், இளைஞன் மற்றும் 2011ம் ஆண்டு வெளியான பொன்னர் சங்கர் வரை நீடித்தது. தியாகராஜன் இயக்கத்தில் பிரசாந்த் இரு வேடங்களில் நடித்த வரலாற்று திரைப்படம் கருணாநிதி எழுதிய பொன்னர் சங்கர் நாவலை தழுவி எடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Related posts

Leave a Comment