புத்துணர்ச்சி தரும் புதினா!

சமையலுக்கு பயன்படுத்தும், புதினா இலையை பயன்படுத்தி, உடல் அழகை பராமரிப்பது குறித்து, அழகுக்கலை நிபுணர் வசுந்த்ரா: முகத்தில் படிந்திருக்கும் அதிகப்படியான எண்ணெய் பசையைத் தவிர்ப்பது; இளமையான பொலிவைத் தருவது, வெயிலில் அதிகமாகச் சுற்றுவதால் ஏற்படும் சரும எரிச்சல் போன்றவற்றை, புதினா எளிதில் சரிசெய்து விடுவதால், அழகு சாதனப் பொருட்களில், புதினா அதிகமாக சேர்க்கப்
படுகிறது. இதில் உள்ள, ‘ஆன்டி ஆக்சிடென்ட்’ தன்மை, பொடுகு, சரும அலர்ஜி போன்ற தொற்றுக்கள் வராமல் தடுப்பதில், முக்கிய பங்கு வகிக்கிறது. புதினா சாற்றை நேரடியாக முகத்தில் தடவக் கூடாது. இரண்டு தேக்கரண்டி ஓட்சுடன், ஒரு கைப்பிடி புதினா இலைகளை, மிக்சியில் லைட்டாக அரைத்த பின், அந்தக் கலவையை, ஐந்து நிமிடங்கள், சிறிது தண்ணீரில் ஊற வைக்க வேண்டும்.
இதை முகம், கழுத்து போன்ற பகுதிகளில் தேய்த்துக் கழுவினால், கருமைகள் நீங்கி, முகத்திற்கு, பளிச் அழகு கிடைக்கும். புதினா டானிக்கை வீட்டிலேயே தயாரிக்கலாம். இதை, முகம், தலைமுடிக்கு உபயோகிக்கலாம். ௧ லிட்டர் நீரைச் சுட வைக்கவும். நீர் கொதித்தவுடன் ஒரு கைப்பிடி அளவு புதினாவை சேர்த்து, உடனே அடுப்பை அணைத்து விடவும். ஒரு மணி நேரம் அப்படியே விட்டால், புதினாவின் சாறு, நன்மைகள் அனைத்தும், அந்த நீரில் இறங்கிவிடும். இந்த நீரை, முகத்தில் தடவலாம். முகம் பொலிவு பெறும். இந்த நீரை, உச்சந்தலையில் நன்றாக, மசாஜ் செய்து, 5- – 10 நிமிடங்கள் கழித்து கழுவலாம். முடி உதிர்வது குறையும்; நன்றாக வளரும்.புதினா எண்ணெயை வீட்டிலேயே தயாரிக்கலாம். 100 மி.லி., பாதாம் எண்ணெயுடன், புதினா இலைகளைச் சேர்க்க வேண்டும்.ஒரு பாட்டிலில், முதலில், 25 மி.லி., எண்ணெய் ஊற்றி சிறிது புதினா இலைகளைப் போட்டு, அதன் மேல், மேலும், 25 மி.லி., எண்ணெய் ஊற்றி அதன் மீது மேலும் சிறிது புதினா இலைகள் என, 100 மி.லி., பாதாம் எண்ணெயைப் பிரித்து, இலைகளுடன், லேயர் லேயராக பாட்டிலில் வைக்கவும்.
இரண்டு நாட்களுக்கு லேசான வெயில் படும் இடத்தில் இந்த பாட்டிலை வைத்து எடுக்கும்போது புதினாவின் சாறு, எண்ணெயில் நன்கு கலந்திருக்கும். பின், அதிலுள்ள புதினா இலைகளை எடுத்து, எண்ணெயை வடிகட்டி உபயோகிக்கலாம். இந்த எண்ணெய் உடலுக்கும், தலை முடிக்கும் நல்லது.முக அழகை விடவும், புதினா, தலைமுடிக்கு மிகவும் நல்லது. ஒரு கைப்பிடி அளவு புதினா இலைகளை, மிக்சியில் அரைத்து பிழிந்து, அதன் சாறை மட்டும் தனியே எடுத்து, நாம் உபயோகிக்கும் ஷாம்புகளுடன் சேர்த்து அலசலாம். புத்துணர்ச்சி மிக்க குளியலாகவும் அமையும்!

Related posts

Leave a Comment