கொரோனா தடுப்பு பணிகள் தீவிரம்… சென்னைக்கு மட்டும் 5 அமைச்சர்களை களமிறக்கிய அரசு

சென்னை: சென்னையில் கொரோனா தடுப்பு மற்றும் நிவாரணப் பணிகளை ஒருங்கிணைப்பதற்காக 5 அமைச்சர்களை களமிறக்கியுள்ளது தமிழக அரசு. சென்னையில் கொரோனாவை கட்டுக்குள் கொண்டுவருவதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசு தீவிரமாக முன்னெடுத்து வருகிறது. கொரோனா தடுப்பு சிறப்பு அதிகாரியாக ராதாகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ். நியமனம் செய்யப்பட்டுள்ள நிலையில், இப்போது அமைச்சர்களும் ஒருங்கிணைப்பு பணிக்கு நியமிக்கப்பட்டுள்ளனர்.

அந்த வகையில் அமைச்சர்கள் ஜெயக்குமார், கே.பி.அன்பழகன், காமராஜ், உதயகுமார், எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆகியோருக்கு மண்டல வாரியாக பொறுப்புகள் ஒதுக்கப்பட்டுள்ளன. சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் 5 அமைச்சர்களுக்கும் தலா மூன்று மண்டலங்கள் பிரித்துக் கொடுக்கப்பட்டுள்ளன. அதன்படி ராயபுரம், தண்டையார்பேட்டை, மாதவரம் மண்டலங்களுக்கு அமைச்சர் ஜெயக்குமார் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். அடையாறு, பெருங்குடி, சோழிங்கநல்லூர் மண்டலங்களை கே.பி.அன்பழகனுக்கும், அண்ணா நகர், தேனாம்பேட்டை, கோடம்பாக்கம் மண்டலங்கள் அமைச்சர் காமராஜிடமும் கொடுக்கப்பட்டுள்ளன.

மேலும், திருவொற்றியூர், மணலி, திரு.வி.க.நகர் மண்டலங்களை அமைச்சர் உதயகுமார் கண்காணிப்பார் என்றும், அம்பத்தூர், வளசரவாக்கம், ஆலந்தூர் மண்டலங்களை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கண்காணிப்பார் எனவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது. சென்னை மாநகராட்சி அதிகாரிகள், மருத்துவத்துறை அதிகாரிகள் உள்ளிட்ட கொரோனா தடுப்பு பணிகளில் ஈடுபட்டுள்ள குழுவை ஒருங்கிணைத்து அவர்களின் பணியை அமைச்சர்கள் கண்காணிக்க உள்ளார்கள்.

Related posts

Leave a Comment