சென்னையில் இருந்து திரும்பிய சாத்தூர் தம்பதிக்கு கொரோனா பாதிப்பு

விருதுநகர் மாவட்டத்தில் சென்னையில் இருந்து திரும்பிய சாத்தூர் தம்பதிக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ள நிலையில் பாதிப்பு எண்ணிக்கை 169 ஆக உயர்ந்துள்ளது.

விருதுநகர்:

விருதுநகர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 10,477 பேருக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டதில் 167 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. 503 பேரின் மருத்துவ பரிசோதனை முடிவுகள் இன்னும் தெரிவிக்கப்படவில்லை. 98 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பி உள்ளனர்.

மாவட்டம் முழுவதும் உள்ள 7 தனிமைப்படுத்தும் முகாம்களில் 360 பேர் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இதில் துபாயில் இருந்து வந்த 21 பேர் விருதுநகர் பெண்கள் கல்லூரி முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இந்தநிலையில் நேற்று சாத்தூர் அருகே உள்ள கலிங்கப்பட்டியை சேர்ந்த 28, 23 வயது இளம் தம்பதி கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் சிகிச்சைக்காக விருதுநகர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். கடந்த 3-ந்தேதி சென்னையில் இருந்து திரும்பிய இவர்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டாலும் நேற்று தான் கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. கடந்த 2 தினங்களாக கிராமத்திலேயே தங்கி உள்ள இவர்களால் அந்த கிராம பகுதியில் நோய் தொற்று பரவல் ஏற்பட வாய்ப்பு உள்ளது.

இதன் மூலம் விருதுநகர் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 169 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 3 தினங்களாக நோய் தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ள அனைவருமே சென்னையில் இருந்து திரும்பியவர்களாகவும், அவர்கள் மூலம் பாதிப்பு ஏற்பட்டவர்களாகவும் உள்ளனர்.

Related posts

Leave a Comment