இதுவரைக்கும் இருந்த தோனி இல்லை.. வேற மாதிரி.. ரெய்னா அதிரடி.. தோனி ரசிகர்கள் குஷி!

சென்னை : தோனி முன்பை விட வேறு மாதிரி ஐபிஎல்-லுக்கு பயிற்சி செய்ததாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் துணை கேப்டன் சுரேஷ் ரெய்னா கூறி உள்ளார். தோனி கடந்த ஓராண்டாக கிரிக்கெட் ஆடாத நிலையில் அவரை ஐபிஎல்-இல் காண ரசிகர்கள் ஆவலாக இருந்தனர். அவர்களுக்கு ரெய்னா கூறி உள்ள தகவல் உற்சாகம் அளித்துள்ளது. ஏற்கனவே, பலரும் தோனி முன்பை விட தீவிரமாக பயிற்சி செய்ததாக கூறிய நிலையில் ரெய்னா அதை ரசிகர்களும் காண வேண்டும் எனக் கூறி உள்ளார்

2020 ஐபிஎல் தொடர் 2020 ஐபிஎல் தொடர் மார்ச் 29 அன்று துவங்க இருந்தது. ஆனால், அந்தத் தொடர் கொரோனா வைரஸ் காரணமாக கால வரையின்றி தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இந்திய அணியில் ஓராண்டாக இடம் பெறாத தோனிக்கு இந்த ஆண்டு ஐபிஎல் முக்கியமான தொடராக கருதப்படுகிறது.

தோனி திட்டம் ஐபிஎல் மூலம் தன் பார்மை நிரூபித்து தோனி இந்திய அணியில் இடம் பெற முயற்சித்து வருவதாக கூறப்பட்டது. குறிப்பாக, 2020 டி20 உலகக்கோப்பை தொடரில் ஆட தோனி ஆர்வமாக இருப்பதாக அவருக்கு நெருக்கமான வட்டாரத்தில் இருந்து தகவல்கள் கிடைத்தன.

கடும் பயிற்சி நீண்ட காலமாக எந்த வகையான கிரிக்கெட் போட்டிகளிலும் தோனி ஆடாததால் ஐபிஎல்-லுக்கு கடும் பயிற்சி மேற்கொண்டார் தோனி. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நடத்திய பயிற்சி முகாமில் தோனி அதிரடியாக பேட்டிங் பயிற்சி செய்தார்.

சிஎஸ்கே அணி தகவல் தோனியின் தீவிர பயிற்சி குறித்து சிஎஸ்கே அணியின் பயிற்சியாளர்கள் மற்றும் சக வீரர்கள் பல தகவல்களை ஊடகங்களில் பகிர்ந்து கொண்டனர். அதன் மூலம், தோனி இந்த ஐபிஎல் தொடரை மிகவும் தீவிரமாக எடுத்துக் கொண்டுள்ளார் என்பதை சிஎஸ்கே அணியும் உணர்த்தியது.

சுரேஷ் ரெய்னா என்ன சொன்னார்? இதன் இடையே தான் கொரோனா வைரஸ் காரணமாக ஐபிஎல் தொடர் தள்ளி வைக்கப்பட்டது. இந்த நிலையில், தோனியின் பயிற்சியை அருகில் இருந்து பார்த்த சுரேஷ் ரெய்னா கூறுகையில், ஐபிஎல் விரைவில் நடக்க வேண்டும், பயிற்சியில் தான் பார்த்த தோனியின் ஆட்டத்தை ரசிகர்களும் காண வேண்டும் என கூறினார்.

வேறு மாதிரி இருந்தது தோனி பயிற்சி பற்றி கூறுகையில், “தோனி பயிற்சி செய்த விதம் வேறு மாதிரி இருந்தது. நான் அவருடன் தேசிய அணியிலும், ஐபிஎல்-இலும் ஆடி உள்ளேன். ஆனால், அவர் பயிற்சிகள் இந்த முறை வேறு மாதிரி இருந்தது.” என்றார் சுரேஷ் ரெய்னா.

நான் பார்த்ததை.. “போட்டிகள் விரைவாக துவங்கும் என நான் நம்புகிறேன். அதன் மூலம், அவர் எப்படி தயாராகி இருக்கிறார் என்பதையும், இரண்டு மாதங்களாக பயிற்சி முகாமில் நான் நேரில் பார்த்ததையும் அனைவரும் காண முடியும்.” எனக் கூறினார் சுரேஷ் ரெய்னா.

சோர்வே அடையவில்லை மேலும், “முதல் சில நாட்கள் அவர் லேசாக பயிற்சி செய்தார். ஜிம்முக்கு செல்வது போன்றவற்றில் மட்டுமே கவனம் செலுத்தினார். ஆனால், அவர் அழகான ஷாட்கள் ஆடினார். அவரது உடற்தகுதி அபாரமாக இருந்தது. அவர் சோர்வே அடையவில்லை” என்றார் ரெய்னா.

சிஎஸ்கே ரசிகர்கள் உற்சாகம் சிஎஸ்கே துணை கேப்டன் சுரேஷ் ரெய்னா கூறிய தகவல்களால் ஏற்கனவே டோனியின் ஆட்டத்தை ஐபிஎல்-இல் காண ஆவலாக இருந்த தோனி ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர். ஐபிஎல் விரைவில் நடக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படும் நிலையில், தோனியின் ஆட்டம் பற்றி எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

Related posts

Leave a Comment