ஜெ.அன்பழகன் உடல்நிலையில் முன்னேற்றம்- மருத்துவமனைக்கு சென்று நலம் விசாரித்தார் மு.க.ஸ்டாலின்

திமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகனின் உடல் நிலை குறித்து கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று மருத்துவமனைக்கு சென்று விசாரித்தார்.

சென்னை:

திமுக எம்.எல்.ஏ. ஜெ.அன்பழகன் மூச்சுத்திணறல் காரணமாக குரோம்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு கொரோனா பரிசோதனை செய்ததில் கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. இதையடுத்து அவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு, மருத்துவர்கள் கண்காணித்து வருகின்றனர். அவருக்கு மூச்சு விடுவதில் சிரமம் இருப்பதால் வென்டிலேட்டர் பொருத்தப்பட்டுள்ளது.

வென்டிலேட்டர் பொருத்தபட்ட சமயத்தில் அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருந்தது. அதன் பின்னர் உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டிருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். வென்டிலேட்டர் மூலம் ஆக்சிஜன் தேவை குறைந்திருப்பதாகவும் கூறினர்.

இந்நிலையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று மருத்துவமனைக்கு நேரில் சென்று ஜெ.அன்பழகனின் உடல்நிலை குறித்து மருத்துவர்களிடம் விசாரித்தார். மேலும் அவருக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்து கேட்டறிந்தார். ஜெ.அன்பழகன் உடல்நிலை சீராக உள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் கூறி உள்ளது.

முன்னதாக முதலமைச்சர் எடப்பாடி மருத்துவமனை நிர்வாகத்தை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு ஜெ.அன்பழகனின் உடல்நலம் குறித்து விசாரித்தார். சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மருத்துவமனைக்கு நேரில் சென்று ஜெ.அன்பழகன் உடல்நிலை குறித்து மருத்துவரிடம் கேட்டறிந்தார்.

Related posts

Leave a Comment