மதியழகனின் தியாகத்தை இந்த தேசம் என்றைக்கும் போற்றி வணங்கும்.. டிடிவி தினகரன் இரங்கல்

சென்னை: பாகிஸ்தான் ராணுவத்தால் சுட்டுக் கொல்லப்பட்ட சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த ராணுவ வீரர் மதியழகன் மரணத்திற்கு அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் கட்சி பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் இரங்கல் தெரிவித்துள்ளார். இந்தியா – பாகிஸ்தான் இடையே பல ஆண்டுகளாக எல்லைப் பிரச்சனை தீர்க்கப்படாமல் உள்ள நிலையில் பாகிஸ்தான் அவ்வப்பொழுது எல்லை தாண்டி பயங்கரவாதத்தில் ஈடுபட்டு வருகிறது. இதனை தடுக்கும் விதமாக நமது இந்திய ராணுவமும் எல்லையில் 24 மணி நேரமும் தயார் நிலையில் இருந்து வருகிறது.

இதற்கிடையில் நேற்று மாலை முதல் இரவு வரை இந்தியா பாகிஸ்தான் எல்லையான ஜம்மு காஷ்மீர் சுந்தரபாணியில் இரண்டு நாட்டு ராணுவத்திற்கும் இடையே துப்பாக்கி சண்டை நடைபெற்றதாக கூறப்படுகிறது. இதில் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த மதியழகன் (40) குண்டு பாய்ந்து உயிர் இழந்து உள்ளார்.

இதுகுறித்து டுவிட்டரில் டிடிவி தினகரன் கூறியுள்ளதாவது: சேலம் மாவட்டம் ஸ்ரீரங்காய் காடு கிராமத்தைச் சேர்ந்த இந்திய ராணுவ ஹவில்தார் திரு.மதியழகன், காஷ்மீரில் பாகிஸ்தான் படையினருடன் நடந்த சண்டையில் உயிரிழந்த செய்தி அறிந்து மிகுந்த வருத்தமடைந்தேன்.

நாட்டுக்காக அவரை இழந்திருக்கும் குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். மதியழகனின் தியாகத்தை இந்த தேசம் என்றைக்கும் போற்றி வணங்கும். இவ்வாறு டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

Related posts

Leave a Comment