சென்னை உள்பட 4 மாவட்டங்களில் பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு சிறப்பு பேருந்து

சென்னை: சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு சிறப்பு பேருந்து இயக்கப்படும் என பள்ளிக் கல்வித் துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் ஜூன் 15-ஆம் தேதி முதல் 10-ஆம் வகுப்பு தேர்வு தொடங்குகிறது. 11-ஆம் வகுப்புக்கு விடுபட்ட பாடத்திற்கான பொதுத் தேர்வுகள் 16ஆம் தேதி நடைபெறவுள்ளன. அதன் தொடர்ச்சியாக 12ஆம் வகுப்பின் கடைசி பாட தேர்வை எழுதாமல் உள்ள மாணவர்களுக்கும் தேர்வு நடைபெற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இந்த நிலையில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக தேர்வு எழுதும் மாணவர்களுக்கு தமிழக அரசு சிறப்பு பேருந்துகளை ஏற்பாடு செய்துள்ளது. அதன்படி அவர்கள் வீட்டிலிருந்து பள்ளிக்குச் செல்லவும், மீண்டும் வீட்டிற்கு வரவும் ஏதுவாக சிறப்பு பேருந்துகளை இயக்க ஏற்பாடு செய்துள்ளது.

அது போல் தேர்வு பணியில் ஈடுபடும் ஆசிரியர்கள் உள்ளிட்டேரும் அந்த பேருந்தில் பயணம் செய்யலாம் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். இதற்காக முதன்மை கல்வி அலுவலர்கள் ஒரு சிறப்பு அதிகாரியை நியமிக்க வேண்டும். அவர் போக்குவரத்து துறையின் நிர்வாக இயக்குநரை தொடர்பு கொண்டு பேருந்து தேவைப்படும் மாணவர்களின் விவரங்களை வரும் 8ஆம் தேதி பிற்பகல் 3 மணிக்குள் பள்ளிக் கல்வித் துறை இயக்குநரகத்தின் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும். பேருந்தில் பயணம் செய்யும் மாணவர்களிடம் தேர்வு நுழைவுச் சீட்டு மற்றும் அடையாள அட்டைகளை வைத்திருக்க வேண்டும். அது போல் தேர்வு பணிக்கு வரும் ஆசிரியர்களும் அடையாள அட்டைகளை வைத்திருக்க வேண்டும். பேருந்து குறித்த தகவல்கள் மாணவர்களுக்கு முன்கூட்டியே தெரிவிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Related posts

Leave a Comment