கொரோனா வைரஸை தடுக்க பரிசோதனையை அதிகப்படுத்துவதுதான் ஒரே வழி.. முதல்வர்

சென்னை: கொரோனா வைரஸ்க்கு எதிரான போரில் நாம் வெற்றி பெறுவோம் என்பதில் ஐயம் இல்லை என்று தெரிவித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, இதுவரை நாட்டிலேயே அதிகபட்சமாக தமிழகத்தில்தான் 6.5லட்சம் பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது என்றார். கொரோனா வைரஸ் தொற்று தமிழகத்தில் அதிவேகத்தில் பரவி வருகிறது. குறிப்பாக சென்னையில் கொரோனா வைரஸ் தினமும் 1000த்துக்கும் அதிகமானோருக்கு தொற்று உறுதி செய்யப்படுகிறது. சென்னையில் கொரோனா பரவல் அசாதாரண நிலையை எட்டி உள்ளது. இந்நிலையில் கொரோனா பரவலை தடுக்க தமிழக அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று மாலை 6 மணி அளவில் பேசினார். அப்போது அவர் கூறுகையில்,

பரிசோதனை அதிகம் “உலகிற்கே புதுமையான இந்த வைரஸ் தொற்றினை வெற்றிக் கொள்ள ஆரம்பத்திலிருந்தே, அதாவது, இந்த தொற்று நோய் தமிழ்நாட்டிற்கு வருவதற்கு முன்பிருந்தே இந்தியாவிற்கே முன்னோடியாக உங்களது அரசு திட்டமிட்டு, பல்முனை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. தொடக்கத்திலேயே நோயின் தன்மையை அறிந்துக் கொள்ளவும், நோய் தொற்றினை தடுக்கவும், பரிசோதனைகளை அதிகப்படுத்துவதுதான் ஒரே வழி எனக் கண்டறிந்து, மற்ற மாநிலங்களைவிட தமிழ்நாட்டில் அதிக அளவில் தமிழக அரசு பரிசோதனைகளை மேற்கொண்டு வருகிறது. இதுவரை தமிழகத்தில் 5.5லட்சம் பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. தினமும் சராசரியாக 13 ஆயிரம் பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது.

கொரோனாவை வெல்வோம் கொரோனா வைரஸ் இயல்பு வாழ்க்கையையும், பொருளாதாரத்தையும் பாதித்துள்ளது. பொருளாதார பாதிப்பை தவிர்க்க முழு ஒத்துழைப்பு தேவை. கொரோனாவுக்கு எதிரான போரில் நாம் வெற்றி பெறுவோம் என்பதில் எந்த ஐயமில்லை. தமிழகத்தில் கொரோனா பாதிப்புள்ளவர்களில் 86% பேருக்கு எந்த அறிகுறியும் இல்லை. தமிழகத்தில் மொத்தமாக 35.65 லட்சம் தொழிலாளர்களுக்கு நிவாரணம் வழங்கப்பட்டு வருகிறது. இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் அரிசி விலையில்லாமல் வழங்கப்பட்டு வருகிறது. அம்மா உணவகங்கள் மூலம் 8 லட்சம் மக்களுக்கு தினமும் சூடான, சுவையான, சுகாதாரமான உணவு வழங்கப்பட்டது

சுகாதார பணியாளர்கள் மருத்துவ, பொது சுகாதார உள்கட்டமைப்பை மேம்படுத்த மார்ச், ஏப்ரல் மாதங்களில் ஓய்வுப் பெற்ற மருத்துவர்கள், செவிலியர்கள், தொழில் நுட்பப் பணியாளர்கள் ஆகியோர் ஒப்பந்தம் முறையில் பணி புரிய அனுமதிக்கப்பட்டனர். சுமார் 2,500 செவிலியர்கள் 6 மாத ஒப்பந்த அடிப்படையில் பணி நியமனம் செய்யப்பட்டனர். இன்று வரை புதியதாக 530 மருத்துவர்கள், சுமார் 2,323 செவிலியர்கள், மருத்துவர் பணியாளர் தேர்வாணையம் மூலம் தேர்வு செய்யப்பட்டு, பணியில் சேர்க்கப்பட்டனர். மேலும் 1,500 ஆய்வக தொழில் நுட்ப வல்லுநர்களும், 2,715 பல்நோக்கு சுகாதார பணியாளர்களும், 334 சுகாதார ஆய்வாளர்களும் தற்காலிகமாக நியமிக்கப்பட்டனர்.

மின் கட்டணம் 25.3.2020 முதல் 5.7.2020 தேதி வரை, மின் கட்டணம் செலுத்த கடைசி தேதி உள்ள சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களைச் சார்ந்த தாழ்வழுத்த நுகர்வோர்கள், தங்களது மின்இணைப்பிற்கான மின் கட்டணத்தை 6.7.2020 தேதி வரை தாமத கட்டணம் மற்றும் மறு மின் இணைப்பு கட்டணம் இன்றி செலுத்தலாம். மேலும், தமிழ்நாட்டில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களை தவிர்த்து மற்ற மாவட்டங்களில் உள்ள தாழ்வழுத்த நுகர்வோர்கள் மின்கட்டணம் செலுத்த கடைசி தேதி 25.3.2020 முதவ் 14.6.2020 தேதி வரை இருப்பின், அவர்கள் 15.6.2020 தேதி வரை தாமத கட்டணம் மற்றும் மறு மின் இணைப்பு கட்டணமின்றி செலுத்தலாம் என்ற சலுகை வழங்கப்பட்டுள்ளது.

சிறு தொழில்களுக்கு கொரோனா தொற்றால் ஏற்பட்ட பொருளாதார பாதிப்பிலிருந்து குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக “கோவிட் நிவாரணம் மற்றும் மேம்பாட்டுத் திட்டம் என்ற திட்டத்தினை 31.3.2020 அன்று அறிவித்தேன். இத்திட்டத்தின் கீழ் ஒரு நிறுவனத்திற்கு 25 லட்சம் ரூபாய் வரை தமிழ்நாடு அரசின் 6ரூ வட்டி மானியத்துடன் கடன் வழங்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. 1.6.2020 தேதி வரை 855 குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு மொத்தம் 112 கோடி ரூபாய் கடன் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

கை கழுவ வேண்டும் ஊரடங்கினை அரசு அமல்படுத்தினாலும், பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தாலும், மக்களின் முழு ஒத்துழைப்பு இல்லை என்றால் இந்நோய் பரவலை தடுப்பது சாத்தியம் ஆகாது. வீட்டிலும், பணிபுரியும் இடங்களிலும், பொது மக்கள் அடிக்கடி சோப்பை பயன்படுத்தி கை கழுவ வேண்டும். மேலும், பொது மக்கள் கூடுமானவரை தேவையில்லாமல் வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும். தவிர்க்க முடியாத காரணங்களுக்காக வெளியில் செல்லும் போது கண்டிப்பாக முகக் கவசம் அணிய வேண்டும். சமூக இடைவெளியை முறையாக கடைப் பிடித்தும், ஆரோக்கியமான வாழ்க்கை முறைகளையும், உணவு பழக்க வழக்கங்களையும் கடைப்பிடிக்க வேண்டும் என்று நான் உங்களை அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்” என்றார்.

Related posts

Leave a Comment