இருக்கு ஆனா இல்லை

விருதுநகர், : விருதுநகரில் செயல்படாத அரசு மருத்துவமனை புறநோயாளிகள் பிரிவால் பொதுமக்கள் அவதிப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

விருதுநகர் பழைய அருப்புக்கோட்டை ரோட்டில் உள்ள இப்பிரிவு இருந்தும் இல்லாத நிலையில் உள்ளது. டாக்டர், நர்ஸ் வருவதும், செல்வதும் கூட யாருக்கும் தெரிவதில்லை. குறைந்த நேரமே வந்து பணி செய்து விட்டு பெயரளவில் இந்த பிரிவை செயல்படுத்துகின்றனர். குறைந்த பட்சம் 1 மணி நேரம் கூட செயல்படவில்லை என்கின்றனர் இப்பகுதி மக்கள்.இதனால் இப்பகுதி மக்கள் சிறிய நோய்க்கும் அரசு மருத்துவமனையை நாட வேண்டியுள்ளது. எந்த தேவைக்காக இப்பிரிவு கொண்டு வரப்பட்டதோ அதன் நோக்கமே சீரழிந்து விட்டது. அரசாணை இல்லாமல் இப்பிரிவு துவங்கப்பட்டதால் டாக்டரை நியமிக்க முடியாமல் திண்டாடுவதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறுகின்றனர்.

மக்களின் நலனை கருத்தில் கொண்டு இப்பிரிவை முழுமையாக செயல்படுத்த மாவட்ட நிர்வாகம் முன் வர வேண்டும். இல்லையெனில் சிதிலமடைந்து வரும் சித்தா பிரிவையாவது இங்கு மாற்றம் செய்தால் பொதுமக்கள் பயன்பெறுவர் என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.

Related posts

Leave a Comment