அவங்க 2 பேரும் மறுபடியும் டீமுக்கு வந்துட்டாங்க.. விராட் கோலிக்கு மறைமுக வார்னிங் தந்த டிராவிட்!

பெங்களூரு : கேப்டன் விராட் கோலி மற்றும் இந்திய அணிக்கு ராகுல் டிராவிட் மறைமுக எச்சரிக்கை விடுத்துள்ளார். இந்திய அணி வரும் நவம்பர், டிசம்பரில் ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளதாக தகவல்கள் கூறப்படுகிறது. அப்போது நடக்க உள்ள டெஸ்ட் தொடரை, கடந்த முறை போல இந்தியா எளிதாக வெல்ல முடியாது என சுட்டிக் காட்டி எச்சரித்துள்ளார் டிராவிட்.

இந்தியா பெற்ற வெற்றி கடந்த 2018 – 19ஆம் ஆண்டு நடந்த ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை இந்தியா கைப்பற்றியது. முதன் முறையாக ஆஸ்திரேலிய மண்ணில் டெஸ்ட் வெற்றி பெற்று விராட் கோலி தலைமையிலான இந்திய அணி பெரும் சாதனை செய்தது.

டெஸ்ட் தொடர் அடுத்த டெஸ்ட் தொடர் ஆஸ்திரேலியாவில் 2020 டிசம்பரில் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. தற்போது கொரோனா வைரஸ் பாதிப்பு உலகை அச்சுறுத்தி வரும் நிலையில், அதற்கிடையே இந்த தொடரை பாதுகாப்பாக நடத்த ஆஸ்திரேலிய கிரிக்கெட் அமைப்பு திட்டமிட்டுள்ளது.

இந்த முறை.. இந்த சவாலான டெஸ்ட் தொடர் குறித்து ராகுல் டிராவிட் பேசுகையில், கடந்த முறை ஆஸ்திரேலிய அணியில் ஸ்டீவ் ஸ்மித், டேவிட் வார்னர் இடம் பெறவில்லை, ஆனால் அவர்கள் இந்த முறை அணியில் இடம் பெற்றுள்ளனர் என கூறி உள்ளார்.

இரண்டு முக்கிய பேட்ஸ்மேன்கள் “ஆஸ்திரேலிய அணியில் ஸ்டீவ் ஸ்மித், டேவிட் வார்னர் இல்லாதது அவர்களுக்கு மிகப் பெரிய பாதிப்பாக அமைந்தது. அவர்கள் தான் அந்த அணியின் இரண்டு முக்கிய பேட்ஸ்மேன்கள். அவர்கள் தான் அந்த அணிக்கு அதிக ரன்களை குவித்துள்ளனர்.” என்றார் டிராவிட்.

ஆஷஸ் தொடர் “ஸ்மித்தை போன்ற ஒருவர் ஆஷஸ் தொடரில் எத்தனை பெரிய தாக்கத்தை ஏற்படுத்த முடியும் என்பதை நாம் பார்த்தோம். அப்போது வார்னர் பார்மில் இல்லாத போதும், அவர் லாபுஷாக்னே உடன் சேர்ந்து அந்த தொடரை சுமந்து சென்றார்” என குறிப்பிட்டார் டிராவிட்.

சிறந்த வீரர்கள் அணியில் இல்லை “ஆஸ்திரேலியா, இந்தியா உடனான கடைசி டெஸ்ட் தொடரைப் பற்றி எப்போதும் ஸ்மித், வார்னர் அணியில் இல்லை, எங்கள் சிறந்த வீரர்கள் அணியில் இல்லை என கூறலாம். ஆனால், இந்த முறை இரண்டு அணிகளின் சிறந்த வீரர்களும் ஆடப் போகிறார்கள்” என்றார் டிராவிட்.

எதிர்பார்ப்பு அடுத்து டிராவிட் இந்த தொடருக்கான தன் எதிர்பார்ப்பு பற்றி பேசும் போது இந்திய அணியின் வேகப் பந்துவீச்சு, தலைசிறந்த வீரர்கள் மற்றும் கடந்த முறை பெற்ற வெற்றி ஆகியவற்றை குறிப்பிட்டார். அதே சமயம், ஆஸ்திரேலியாவிலும் சிறந்த வீரர்கள் இருப்பதால் இந்த தொடரை அனைவரும் ஆவலோடு எதிர்பார்ப்பதாக கூறினார்.

நான்கு டெஸ்ட் போட்டிகள் இந்தியா – ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடரில் நான்கு போட்டிகள் இடம் பெற்றுள்ளது. டிசம்பர் 3 அன்று முதல் போட்டி துவங்கும் வகையில் அட்டவணையை வெளியிட்டுள்ளது ஆஸ்திரேலிய கிரிக்கெட் அமைப்பு. ஆனால், கொரோனா வைரஸ் பாதிப்புக்கு ஏற்ப இந்த தொடரில் மாற்றம் இருக்கக் கூடும்.

Related posts

Leave a Comment