‘போன்’ செய்தால் போதும்… வீடு சோலையாகும்… பசுமையை நோக்கி ‘வனத்திற்குள் அருப்புக்கோட்டை’

அருப்புக்கோட்டை:கொரோனா ஊரடங்கிலும் ஒரு ‘போன்’ செய்தால், தேடி வந்து மரக்கன்றுகளை நட்டு, பராமரிப்பு முறைகளை கற்று கொடுத்து, வீட்டை பசுமையாக மாற்றி கொடுத்து அசத்தி விடுகின்றனர் ‘வனத்திற்குள் அருப்புக்கோட்டை’ அமைப்பினர்.

மரங்களை அழித்ததன் விளைவாக இன்றைக்கு மழையின்றி, தண்ணீரின்றி தவித்து வருகிறோம்.

மரங்கள் வளர்ப்பின் அவசியம் பற்றி மக்களிடையே ஓரளவு விழிப்புணர்வு ஏற்பட்டு வருகிறது. சுற்றுச்சூழல் மேம்பாடு காணும் பொருட்டு வனத்திற்குள் அருப்புக்கோட்டை என்ற பெயரில் தன்னார்வலர்கள் ஒருங்கிணைந்து பசுமை அமைப்பை ஏற்படுத்தியுள்ளனர். இதன் குறிக்கோள் நகரில் ஒரு லட்சம் மரக்கன்றுகளை நட்டு பராமரித்து நகரை பசுமையாக்குவது.

இதில் மாணவர்கள், ஆசிரியர்கள், அலுவலர்கள் உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர். கொரோனா ஊரடங்கிலும் போன் செய்து மரக்கன்றுகள் கேட்டாலும் அதை எடுத்து சென்று இலவசமாக வழங்கி, வீட்டில் அவர்கள் விரும்பிய இடத்தில் நட்டு, பராமரிப்பு முறைகளை விளக்குகின்றனர். மருது, புங்கை, வாதா, நாவல், மயிலம், வேங்கை, மா உட்பட பலவித ரகங்களை 2 அடி உயரம் வரை வளர்த்து தருகின்றனர். வீட்டை பசுமையாக்க ஆசையா 90421 02001 ல் ஹலோ சொல்லலாம்.

சோலை வனமாவது உறுதி

சுற்றுச்சூழல் மேன்மையடைய மரங்களின் வளர்ப்பு அவசியமாகிறது. அமைப்பு சார்பில் எட்டாயிரத்து 400 மரக்கன்றுகளை நட்டு பராமரித்து வருகின்றோம். ஒரு லட்சம் மரக்கன்றுகளை நட்டு பராமரிப்பது என இலக்கு நிர்ணயித்துள்ளோம். மரக்கன்று நட்டு வளர்க்க விரும்புவோர் போன் செய்தால் நாங்களே சென்று மரன்கன்றுகளை நட்டு பராமரிப்பு முறைகளை கற்று தருகின்றோம். தண்ணீர் விட்டு பராமரித்தால் போதும். ஓரிரு ஆண்டுகளில் சோலை வனமாக மாற்றுவோம்.

சுந்தரராஜன், நிறுவனர், வனத்திற்குள் அமைப்பு

எண்ணமும் பசுமையாகும்

மக்களிடையே மரங்கள் வளர்ப்பதால் ஏற்படும் நன்மைகள் பற்றிய விழிப்புணர்வு போதுமானதாக இல்லை. மரங்களை வளர்க்கும் பண்புகளை மக்கள் வளர்த்து கொள்ள வேண்டும் என்பதற்காக போன் செய்து கேட்டால் மரக்கன்றுகளுடன் சென்று விரும்பும் இடத்தில் நட்டு பராமரிப்பு முறைகளை விளக்குகிறோம். மரக்கன்றுகளை பாதுகாத்து தினமும் தண்ணீர் ஊற்றி வளர்க்க வேண்டும். கண் முன்னே மரக்கன்றுகள் கிளைகள் விட்டு அழகாய் வளரும் போது எண்ணமும் பசுமையாகும்.

அழகர்சாமி, இயற்கை ஆர்வலர்

Related posts

Leave a Comment