என்னோட கால்பந்தாட்டத்த நான் ரொம்ப விரும்பறேன்… இப்போதைக்கு ரிடையர்ட்மெண்ட் கிடையாது

டெல்லி : தன்னுடைய கால்பந்தாட்டத்தை தான் மிகவும் விரும்புவதாகவும் தற்போதைக்கு ஓய்வு அறிவிக்கும் எண்ணம் இல்லை என்றும் இந்திய கால்பந்தாட்ட அணியின் கேப்டன் சுனில் சேத்ரி தெரிவித்துள்ளார். இன்னும் 3 முதல் 4 வருடங்களுக்கு தான் அணியில் நீடித்திருப்பேன் என்றும் சுனில் சேத்ரி கூறியுள்ளார். 35 வயதாகும் சுனில் சேத்ரி அதிகப்படியான சர்வதேச போட்டிகளில் விளையாடியவர் என்ற பெருமைக்கும் அதிகமான கோல்களை அடித்தவர் என்ற பெருமைக்கும் உரியவர்.

பெருமைமிகு வீரர் இந்திய கால்பந்தாட்ட அணியின் கேப்டன் சுனில் சேத்ரி அதிகமாக சர்வதேச போட்டிகளில் அதாவது 115 போட்டிகளில் விளையாடியவர் என்ற பெருமைக்கு உரியவர். 15 ஆண்டுகள் தன்னுடைய கால்பந்தாட்ட கேரியரில் இதுவரை 72 கோல்களை அவர் அடித்துள்ளார். போர்ச்சுக்கல்லை சேர்ந்த கிறிஸ்டியானோ ரொனால்டோவுக்கு அடுத்த படியாக 2வது இடத்திலும் அர்ஜெண்டினா வீரர் லியோனல் மெஸ்ஸிக்கு முன்னதாகவும் இவரது சாதனை உள்ளது.

உறுதியாக பங்கேற்பேன் பெர்த்தில் வரும் 2022ல் நடைபெறவுள்ள கால்பந்தாட்ட உலக கோப்பை தொடரில் தான் பங்கேற்பேன் என்று சேத்ரி உறுதிப்பட தெரிவித்துள்ளார். 35 வயதான சேத்ரி 2026ல் தோஹாவில் நடைபெறும் கால்பந்தாட்ட உலக கோப்பையில் தான் பங்கேற்பேனா என்று தெரியவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார். ஆனால் இன்னும் 3 முதல் 4 வருடங்களுக்கு ஓய்வு அறிவிக்கும் எண்ணமில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

3 -4 ஆண்டுகளுக்கு விளையாடுவேன் தன்னுடைய கால்பந்தாட்டத்தை தான் மிகவும் விரும்புவதாகவும் அதனால் இன்னும் 3 முதல் 4 வருடங்களுக்கு தான் அணியை விட்டு எங்கும் போக மாட்டேன் என்றும் அவர் கூறியுள்ளார். தான் தன்னுடைய மனைவியிடம் தான் மிகவும் வலிமையாக இருப்பதாக அடிக்கடி பெருமையுடன் கூறுவேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார். உதாண்தா மற்றும் ஆஷிக் குருனியான் ஆகியோருக்கு சவால் விடும் அளவிற்கு தன்னுடைய வலிமை உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

சேத்ரி உறுதி தான் இன்னும் எவ்வளவு காலத்திற்கு கால்பந்தாட்டத்தை விளையாடுவேன் என்று தனக்கு தெரியாது என்றும் ஆனால் விளையாடும் வரை மிகவும் என்ஜாய் செய்து விளையாடுவேன் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். தேசிய அணியில் விளையாடும்வரை தன்னுடைய சிறப்பான ஆட்டத்தை அளிப்பேன் என்றும் அவர் உறுதிபட தெரிவித்துள்ளார்.

பேச்சுவார்த்தைகள் மும்மூரம் தன்னுடைய பயோ பிக் குறித்த பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாகவும் விரைவில் அந்த பணி துவங்கும் என்றும் சேத்ரி குறிப்பிட்டுள்ளார். ஆனால் நடிகர், நடிகைகள், இயக்குநர் குறித்த விஷயங்களில் தான் தலையிட விரும்பவில்லை என்றும் அவர் கூறியுள்ளார். முன்னாள் கால்பந்தாட்ட கேப்டன் பாய்சந்த் பூட்டியாவின் தாக்கம் தன்னுடைய ஆட்டத்தில் வெளிபடும் என்று தெரிவித்த சேத்ரி, அவர் தன்னுடைய ஆட்டத்தை பாராட்டியது மறக்க முடியாத தருணம் என்றும் கூறியுள்ளார்.

Related posts

Leave a Comment