பிற மாவட்டங்களுக்கு செல்ல யாரையும் அனுமதிக்க கூடாது- வியாபார தொழில்துறை சங்கம் வலியுறுத்தல்

கொரோனா வேகமாக பரவி வருவதால் சென்னையில் இருந்து பிற மாவட்டங்களுக்கு செல்ல யாரையும் அனுமதிக்க கூடாது வியாபார தொழில்துறை சங்கம், முதல்-அமைச்சருக்கு கோரிக்கை விடுத்துள்ளது.

விருதுநகர்:

விருதுநகர் வியாபார தொழில்துறை சங்க தலைவர் வி.வி.எஸ்.யோகன், முதல்-அமைச்சருக்கு மனு ஒன்று அனுப்பியுள்ளார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை தமிழக அரசு சிறப்பாக செய்து வருகிறது. இந்தநிலையில் கடந்த 10 நாட்களாக தமிழகத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே செல்கிறது. இதில் சென்னை மற்றும் அதனை சுற்றி உள்ள 3 மாவட்டங்களில் தான் அதிக அளவில் பாதிப்பு உள்ளது.

சென்னையில் இருந்து பிற மாவட்டங்களுக்கு வருவோர் மூலம் கொரோனா தொற்று பரவும் நிலை ஏற்பட்டு வருகிறது. ஆகையால் சென்னையில் இருந்து 10 நாட்களுக்கு யாரையும் பிற மாவட்டங்களுக்கு வர தடைவிதித்து யாரையும் அனுமதிக்க கூடாது. அதேபோல சென்னையில் முழுமையாக ஊரடங்கை பின்பற்றினால் தான் கொரோனா வைரஸ் பரவாமல் கட்டுக்குள் கொண்டு வர இயலும்.

மேலும் அரசு வழிகாட்டுதலை பின்பற்றி பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். டாஸ்மாக் கடைகளை திறந்ததால் தான் கொரோனா தொற்று அதிகமாக பரவி வருகிறது.

மதுவிலக்கு அமலில் இருக்கும் போது கொரோனா பாதிப்பு குறைவாக தான் இருந்தது. ஆகையால் உடனடியாக மதுவிலக்கை அமல்படுத்த டாஸ்மாக் கடைகளை மூடவேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

Related posts

Leave a Comment