ஆட்டம் காணும் ஆனைக்குட்டம் ஷட்டர்கள் பழுதால் தண்ணீர் தேக்குவதில் சிக்கல்

விருதுநகர்:விருதுநகர் நகராட்சியின் முக்கிய குடிநீராதாரமான சிவகாசி ஆனைக்குட்டம் அணை பராமரிப்பின்றி ஷட்டர்கள் பழுதாகி வருகிறது. இதனால் அணைக்கு வரும் தண்ணீரும் ஷட்டர் வழியாக உடனே வெளியேறி விடுகிறது.

விருதுநகர், சிவகாசி, திருத்தங்கல் உள்ளிட்ட பகுதிகளின் குடிநீர் ஆதாரமாக ஆனைக்குட்டம் அணை உள்ளது. 1986 ல் கட்டப்பட்ட இவ்அணையின் நீர் மட்டம் 25 அடி. மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்யும் மழை நீர் அர்ச்சுனா நதியில் சங்கமித்து வத்திராயிருப்பு பெரியகுளம் கண்மாயில் நிறைத்து எரிச்சநத்தம், எம்.புதுபட்டி வழியாக ஆனைக்குட்டம் அணையை வந்தடைகிறது.

அணையை பொதுப்பணித்துறை முறையாக பராமரிப்பதில்லை. இதன் காரணமாக அணை ஷட்டர்கள் பழுதாகி வருகின்றன. மழை நீர் வரத்து அதிகரித்தாலும் பழுதான ஷட்டர்கள் வழி யாக பெருமளவு நீர் வெளியேறி விடுகிறது. இதனால் பாசன வசதிக்கும் வழி இல்லாமல் போகிறது. இங்கு அமைக்கப்பட்டுள்ள குடிநீரும் தண்ணீரீன்றி வறண்டு வருவதால் விருதுநகர் குடிநீருக்கும் பெரும் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது.

சேமிக்க முடியாது வீண்

ஆனைக்குட்டம் நீர்ப்பிடிப்பு பகுதியில் ஆண்டு தோறும் பெய்யும் மழை நீரை முறையாக சேமித்தால் போதும் விருதுநகர், சிவகாசி, திருத்தங்கல் பகுதிக்கு முழுமையாக குடிநீர் விநியோகிக்க முடியும். ஷட்டர்கள் பழுதால் மழை பெய்தாலும் தண்ணீரை சேமிக்க முடியாமல் வீணாகி வருகிறது. அணையை பராமரிக்க தேவையான நிதியை அரசு ஒதுக்க வேண்டும்.

– ரெங்குதாஸ், துணைத் தலைவர்

விவசாயிகள் சங்கம்.

சிக்கல் வராமல் பாருங்க

மாவட்டத்திலே பெரிய நீர்தேக்கமாக ஆனைக்குட்டம் உள்ளது. ஷட்டர் பழுது பிரச்னை பல ஆண்டுகளாக உள்ளது. பொதுப்பணித்துறை அதிகாரிகள் கண்டு கொண்டதாக

தெரியவில்லை. அதிகாரிகளின் மெத்தனத்தால் அணை நீரை பயன்படுத்தி பாசன வசதி பெற இயலவில்லை. குடிநீராதாரமாக உள்ள அணையை உடனே பராமரித்து குடிநீருக்கு சிக்கல் வராமல் பார்த்து கொள்ள வேண்டும்.

– கர்ணன், மாநில அமைப்பாளர்

விவசாயிகள் நலச்சங்கம்.

ரூ.6 லட்சம் ஒதுக்கீடு@

@

அணையின் ஷட்டர்கள் 2019ல் பழுது நீக்கி தண்ணீர் வீணகாமல் தடுக்கப்பட்டது.

தற்போது ஷட்டர் பழுது நீக்குதல் உள்ளிட்ட பணிகள் ரூ.6 லட்சம் மதிப்பில் மேற்கொள்ளப்படும். இதர பராமரிப்பு பணிக்கான நிதி கிடைத்ததும் பணிகள் துவக்கப்படும்.

குருசாமி, செயற்பொறியாளர்

Related posts

Leave a Comment