தொற்றை சுமந்து உலாவும் மக்களால் விழிபிதுங்கி நிற்கும் மாநகராட்சி

சென்னை : தொற்று அறிகுறி ஏதும் இல்லாமல், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களும் அவர்களுடன் தொடர்பில் உள்ளவர்களும் உலாவுவதால், கட்டுப்படுத்தவும் கண்டறியவும் முடியாமல், மாநகராட்சி அதிகாரிகள் திணறி வருகின்றனர்.

சென்னையில், கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. துவக்கத்தில், தொற்று பாதித்தவரின் தொடர்புகளை கண்டறிந்து, பரிசோதனை செய்யப்பட்டது.பின், காய்ச்சல், சளி, இருமல் போன்ற அறிகுறியுடன் அதிகம் பேருக்கு தொற்று பாதிக்கிறது. இதை, வீடுதோறும் ஆய்வு நடத்தும் களப்பணியாளர்களும் கண்டுபிடிக்கின்றனர். விழிப்புணர்வு காரணமாக, காய்ச்சல் பாதித்தவர்களே, பரிசோதனை செய்ய முன்வந்து உள்ளனர்.

அவர்களுக்கு, தொற்று உறுதியானால், நெருங்கிய உறவினர்களுக்கும் பரிசோதனை செய்யப்படுகிறது. ஆனால், இதர தொடர்புகளை அடையாளப்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், தொடர்புகளை கண்டறிந்து பரிசோதனை செய்வதில், மாநகராட்சிக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.இதற்கு ஊரடங்கு தளர்த்தப்பட்டதும் காரணமாகும். டீக்கடை, ஓட்டல் உள்ளிட்ட அனைத்து கடைகளும் திறக்கப்பட்டுள்ளன. வாகன போக்குவரத்து அதிகமாக உள்ளது. மக்கள் நடமாட்டமும் அதிகரித்துள்ளதால், அதிகாரிகள் விழி பிதுதிங்கி உள்ளனர்.

இது குறித்து, மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:வெளிநாடு, டில்லி மாநாடு, கோயம்பேடு மார்க்கெட் தொடர்பான தொற்றுகள் மற்றும் தொடர்புகளை எளிதில் கண்டறிய முடிந்தது.தற்போது, ஊரடங்கு தளர்வால், மக்கள் புழக்கம் அதிகரித்துள்ளது. தொற்று பாதித்த நபர்களிடம், தொடர்புகள் குறித்து கேட்டால், உறவினர்கள், நண்பர்கள், அலுவலக ஊழியர்களை எளிதில் கூறுகின்றனர்.அதே வேளையில், ‘பல கடைகளுக்கு சென்றேன். ஆட்டோ, காரில் ஏறினேன். முன்பின் தெரியாத நடமாடும் வியாபாரியிடம் பேரம்பேசி பொருட்கள் வாங்கினேன். முகவரி கேட்ட நபருக்கு வழி காட்டினேன்’ என, ஒவ்வொரு வரும் வெவ்வேறு நிகழ்வுகளை கூறுகின்றனர்.

இதில், யாரிடம் இருந்து தொற்று பரவியது என, உறுதி செய்ய முடியவில்லை. தொடர்புகளை, கண்டறிவதிலும் சிக்கல் உள்ளது. பலர், அறிகுறி இல்லாமலே, தொற்றை சுமந்து கொண்டு சமூகத்தில் உலாவுகின்றனர். அவர்கள் வழியாக, பலருக்கு பரவ வாய்ப்புள்ளது.இவ்வாறு அவர்கள் கூறினர்.

Related posts

Leave a Comment